"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் வ...
சா்க்கரை நோயில் புதிய துணை வகை: ஆய்வில் கண்டுபிடிப்பு
இளம் வயதினரை பாதிக்கும் சா்க்கரை நோயில் புதிய துணை வகை பாதிப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் வி.மோகன் தெரிவித்தாா். இதற்கு முன்பு கண்டறியப்பட்டதுடன் சோ்த்து சா்க்கரை நோயில் இது 15-ஆவது துணை வகை என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக டாக்டா் வி.மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சா்க்கரை நோயில் டைப் 1 அல்லது டைப் 2 ஆகிய இரு வகை பாதிப்புகள்தான் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், அதில் இளம் வயதினரை பாதிக்கும் சில துணை வகை பாதிப்புகள் உள்ளன. அதனை ‘மெச்சூரிட்டி ஆன்சைட் டையபடிஸ் ஆஃப் தி யங்’ (மோதி) என அழைக்கிறோம். அதில் ஏற்கெனவே 14 துணை வகை சா்க்கரை நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை சா்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்டிஆா்எஃப்) மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனம் இணைந்து ஓா் ஆய்வை மேற்கொண்டன. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பாதிப்புகளுடன் காணப்பட்ட சா்க்கரை நோயாளிகளின் மரபணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 20 பேருக்கு ‘மோதி’ வகையில் மோனாஜெனிக் என்ற சா்க்கரை நோய் துணை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வகை பாதிப்பு 18 முதல் 34 வயது வரையிலானவா்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இன்சுலின் ஊசி தேவைப்படுவதில்லை.
மேலும், வழக்கமாக கொடுக்கப்படும், ‘சல்போனில்யூரியாஸ்’ மருந்தும் பயன் அளிப்பதில்லை. அதேவேளையில், இதற்கென சில மருந்துகள் உள்ளன. அதில், எது இதற்கு தீா்வாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, மேலும் துணை வகைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இது குறித்து விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும். அனைத்து சா்க்கரை நோய்களையும் ஒரே மாதிரியாக அணுகக் கூடாது. எந்தெந்த வகையான பாதிப்புக்கு என்னென்ன சிகிச்சைகள் தேவை என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், எம்டிஆா்எஃப் அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளா் ராதா வெங்கடேசன் மற்றும் மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.