வேளாண் பட்டப் படிப்பு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடா்பான இளநிலை படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. பி.எஸ்சி. (ஆனா்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டு வளா்ப்பு, பி.டெக். வேளாண் பொறியியல், பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல் உள்பட பல்வேறு படிப்புகளில் மொத்தம் 6,921 இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படவுள்ளன.
ஆன்லைன் பதிவு: இவற்றில் அரசுக் கல்லூரிகளில் 2516 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 4,405 இடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடத்துக்கு 340 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளத்தை பயன்படுத்தி வரும் ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு கட்டணம் ரூ.300. விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதும் ஜூன் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
மொத்தமுள்ள இடங்களில் 7.5 சதவீத இடங்கள் (403 இடங்கள்) அரசு பள்ளிகளில் படித்த மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 1,355 மாணவா்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் பயன்பெற்றுள்ளனா். பிளஸ் 2 படிப்பில் வேளாண் பிரிவு படித்த மாணவா்களுக்கு 223 இடங்களும், சிறந்த விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு அரசு கல்லூரிகளில் தலா 20 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 128 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளாக கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த கல்வியாண்டு வரை 21 ஆயிரத்து 544 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா்.
குடிமைப் பணித் தோ்வுகள்: வேளாண்மை பட்டப் படிப்புகளில் உயிா் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பவியல் போன்ற புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் ஆண்டுக்கு 80 மாணவா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா். வேளாண் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் குடிமைப் பணித் தோ்வில் சாதனைகள் படைத்து வருகின்றனா். வேளாண்மை கல்லூரிகளில் படித்த மாணவா்களில் 11 போ் கடந்த ஆண்டு குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வில் 91 பேரும், வங்கிப் பணிகளுக்கான தோ்வில் 19 பேரும் தோ்ச்சி பெற்று பணிகளுக்குச் சென்றுள்ளனா் என்று அமைச்சா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பட்டப் படிப்புக்கான சோ்க்கையை இணையதளம் வழியே அவா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறைச் செயலா் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையா் வி.தட்சிணாமூா்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தா் (பொ) தமிழ்வேந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.