Pope: `போப் பிரான்சிஸின் தைரியமான குரலை நம் செவிகளில் வைத்திருப்போம்'- புதிய போப் ராபர்ட் ப்ரீவோஸ்ட்
கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ம் தேதி இயற்கை எய்தினார்.
இவரது மறைவைத் தொடர்ந்து 'அடுத்த போப் யார்?' என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதல் நாள் வாக்கெடுப்பில் புதிய போப்பாக எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்றும் வாக்கெடுப்பு தொடர்ந்தது.
இதில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வாடிகனிலுள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தின் சிம்னியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேற்றப்பட்டது.

இதன் பிறகு புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார். பதினான்காம் லியோவின் இயற்பெயர் ராபர்ட் பிரிவோஸ்ட்.
புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்களிடம் அமைதியை வலியுறுத்தி பேசியிருக்கிறார் பதினான்காம் லியோ.
அவர் பேசுகையில், "அமைதி உண்டாகட்டும். அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து.
இந்த அமைதி வாழ்த்து உங்கள் இதயங்களைச் சென்றடையவும், உங்கள் குடும்பங்களையும், எங்கிருந்தாலும் எல்லா மக்களையும், எல்லா இனங்களையும், பூமி முழுவதையும் சென்றடைய வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.
இந்த அமைதி நம்மை எல்லோரையும் எந்த வரம்புகளோ நிபந்தனைகளோ இல்லாமல் நேசிக்கும் தேவனிடமிருந்து வருகிறது.

போப்பரசர் பிரான்சிஸின் தைரியமான குரலை நம் செவிகளில் வைத்திருப்போம். அந்த ஆசீர்வாதத்தைத் தொடர அனுமதியுங்கள்.
தேவன் நம் எல்லோரையும் நேசிக்கிறார், தீமை வெற்றி பெறாது. நாம் அனைவரும் தேவனின் கரங்களில் இருக்கிறோம்.
பயமின்றி, ஒன்றுபட்டு, தேவனோடும் ஒருவரோடு ஒருவர் கை கோத்து, நாம் முன்னேறுவோம்.
நாம் கிறிஸ்துவின் சீடர்கள், கிறிஸ்து நமக்கு முன்னால் செல்கிறார். உலகத்திற்கு அவரது ஒளி தேவை. மனிதகுலத்திற்கு தேவனையும் அவரது அன்பையும் அடைய ஒரு பாலமாக அவர் தேவை.
பேதுருவின் வாரிசாக என்னைத் தேர்ந்தெடுத்து, ஒன்றுபட்ட திருச்சபையாக உங்களோடு சேர்ந்து அமைதியையும் நீதியையும் தேடி, இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையாக, பயமின்றி பணியாற்றும் என் கார்டினல் சகோதரர்களுக்கு நன்றி.

ரோம், இத்தாலி, உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகளே, நாம் ஒரு சினோடல் திருச்சபையாக இருக்க விரும்புகிறோம், எப்போதும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி நடப்போம்.
நம் புனித தாய் மரியா எப்போதும் நம்மோடு நடக்க விரும்புகிறார், நம்முடன் அருகில் இருக்க விரும்புகிறார், தன் பரிந்துரையாலும் அன்பாலும் நமக்கு உதவ விரும்புகிறார்.
எனவே, இந்த மிஷனுக்காகவும், திருச்சபை முழுவதற்காகவும், உலகின் அமைதிக்காகவும் ஒன்றாக வேண்டுவோம்," எனப் பேசியிருக்கிறார்.