நிறைவேறாத தந்தையின் ஆசை; கோவை டு சென்னை விமானத்தில் பறந்த முதியவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர். தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போனது. இதுகுறித்து தன் நண்பர்களிடம் பாலன் தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து, தன் நண்பர்கள் உதவியுடன் சுல்தான்பேட்டையில் உள்ள முதியவர்களை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார் பாலன். முதியவர்கள் என்பதால் அவர்களை கவனித்துக் கொள்வதற்கு என ஆட்கள் நியமிக்கப்பட்டதுடன், மருத்துவக் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதியவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருப்பூரில் இருந்து கோவைக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மகாபலிபுரம், மெரினா கடற்கரை, வடபழனி முருகன் கோயில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என பல தலைவர்களின் சமாதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மெட்ரோ ரயிலிலும் பயணித்து குதூகலப்பட்டனர். இரண்டு நாட்கள் சுற்றுலா முடித்து "வந்தே பாரத்" ரயில் மூலம் மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்துஷ பாலன் கூறுகையில், "என் அப்பாவை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. அதற்காக சந்தர்ப்ப சூழ்நிலை அப்போது கிடைக்கவில்லை. தற்போது அதற்கான வசதி என்னிடம் இருந்தும் தந்தை இல்லை. என் தந்தை வயதில் இருக்கும் நட்பு வட்டத்தில் உள்ள குடும்பங்களில் உள்ள முதியவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றேன். விமானத்தில் அவர்கள் சென்றபோது அடைந்த ஆனந்தம் "மகிழ்வித்து மகிழ்" என்ற ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த அடிப்படையில் தான் இந்த சுற்றுலாவையும் ஏற்பாடு செய்தோம். விமானப் பயணம் என்பதை கனவிலும் நினைத்திராத முதியவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் அதன் வாயிலாக அவர்கள் பெற்ற ஆனந்தம் என்பதும் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முதியவர்கள் மூலம் என் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்" என்றார். விமானத்தில் பயணிப்போம் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. திரைப்படத்தில் வரும் விமானத்திலும், மெட்ரோ ரயிலிலும் பயணித்து ஒரு வித புதிய அனுபவத்தை தந்தது என்கின்றனர் முதியவர்கள்.