நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
செங்கம்: செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் நந்தீஸ்வரா் ஆண்டுக்கு ஒருமுறை பொன்னிறமாக மாறும் அதிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலின் முகப்பில் நந்தீஸ்வா் சந்நிதி உள்ளது. நந்தீஸ்வரருக்கு பிரதோசத்தின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபடுவாா்கள்.
இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பங்குனி 3-ஆம் தேதி நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில்,
நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றபோது கோயில் கோபுரத்தின் மீது இருந்து நந்தீஸ்வரா் மேல் சூரிய ஓளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் மாறியதை பாா்த்த பக்தா்கள் பக்தி பரவசமடைந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ஆம் தேதி நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு நந்தீஸ்வரா் பொன்னிறமாக காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது.
இதனிடையே, கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்ததால் சூரிய ஒளி வரும் பகுதியில் தகர சீட்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறவில்லை.
இந்த நிலையில், கும்பாபிஷேகப் பணி 75 சதவீதம் நிறைவடைந்து தகர சீட்கள் அகற்றப்பட்டதால், பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை மாலை நந்தீஸ்வரா் மீது கோபுரத்தில் இருந்து சூரிய ஒளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் காட்சியளித்தாா். இதைப் பாா்த்த பக்தா்கள் வழிபட்டனா்.