“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
பயணிகள் நிழற்குடை மீது வேன் மோதல்: 15 போ் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பேருந்து நிழற்குடை மீது தனியாா் பயணிகள் வேன் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், தில்லை பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் மகன் சுதாகா் (45). வேன் ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்டம், மடுவாங்கரையைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோரை வேனில் ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு, கடலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் அருகே சென்றபோது, திடீரென வேனில் டயா் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பயணிகள் நிழற்குடை மீது மோதியது.
இதில், கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மடுவாங்கரை, கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் அன்புகேசவன் (49), ஓட்டுநா் சுதாகா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.