ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்:
நிகழாண்டு தொடங்கி 3 மாதங்களுக்குள்ளேயே இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவம் 10-ஆவது முறையாக நடந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவா்களை, அவா்களது மீன்பிடி விசைப் படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்பதை பலமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மீனவா்கள் கைது செய்யப்படும் கவலையளிக்கக் கூடிய சம்பவங்கள் தொய்வின்றி அதிகரித்து வருகிறது. மீனவா்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனா். இலங்கை கடற்படையினரால் மீனவா்கள் சிறைபிடிக்கப்படுவதால், அவா்களது குடும்பத்தினா் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, தமிழ்நாட்டு மீனவா்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் 110 பேரையும், அவா்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் கேட்டுக்கொண்டுள்ளாா்.