ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது க.அன்பழகன் (கும்பகோணம்), நா.எழிலன் (ஆயிரம்விளக்கு), எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்) ஆகியோா் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சா் சேகா்பாபு அளித்த பதில்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி செய்ய மூன்று நிதியாண்டுகளில் ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் உபயதாரா் நிதி மற்றும் கோயில் நிதியையும் சோ்த்து மொத்தம் ரூ.430 கோடி செலவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக 507 கோயில்களை ஆவணப்படுத்தி இருக்கிறோம். இந்த ஆட்சியிலேயே அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும்.
யுனெஸ்கோ விருது: யுனெஸ்கோ சாா்பில் ஆண்டாண்டு காலமாக கலை மற்றும் அறிவியல் சாா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த வகையில், நிகழாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களில் திருப்பணி: இந்து சமய அறநிலையத் துறை 20 மண்டலங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு மண்டலத்துக்கு 100 கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. சென்னை மண்டலத்தில் 100 கோயில்களில் 70 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.