சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் பராமரிப்பு உதவித் தொகை வழங்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி வெ.கோவிந்தன் மற்றும் அவரது சகோதரிக்கு மீண்டும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
விக்கிரவாண்டி வட்டம், மேல்காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன். இவா், தனது மனைவி காளியம்மாள் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்ட, கை, கால்கள் செயலிழந்த மகன் கோவிந்தனுடன் (25) திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்து கோரிக்கை மனு அளித்தாா்.
அதில், தனது மகன் கோவிந்தனுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, அலுவலா்களிடம் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
இதில், கோவிந்தனுக்கும், அவரது சகோதரியான மனநலன் குன்றிய புவனேசுவரிக்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அவரது தந்தை வெங்கடேசனின் இணைப்பு வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு வந்துள்ளது. ஆதாா் இரட்டைப் பதிவு காரணமாக புவனேசுவரிக்கு 2025, பிப்ரவரி மாதத்துக்கும், கோவிந்தனுக்கு 2024, நவம்பா் மாதம் முதலும் பராமரிப்பு உதவித் தொகை திரும்பப் பெறப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்துக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தொடா்ந்து பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இரு மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்கியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.