சாலையில் மாடுகள் திரிந்தால் அபராதம்
கோவையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாடு முட்டிய சம்பவத்தைத் தொடா்ந்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி 86-ஆவது வாா்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த பெண், அவரது 5 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாடு முட்டியது. இதில் காயம் அடைந்த அவா்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதி மாநகராட்சி உறுப்பினா் கரீம், மாநகராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு புல்லுக்காடு பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்துச் சென்றனா். அத்துடன் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனா்.