வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது
நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம்(55). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக ராஜாராம் மனைவி பிரிந்து சென்று விட்டாா்.
இந்நிலையில், ராஜாராம் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனிப்பதற்காக ராஜாராம் 2 ஆவது திருமணம் செய்ய நினைத்து, அதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தாா். அதை பாா்த்த மதுரையைச் சோ்ந்த முருகேஸ்வரி(30) என்ற பெண் ராஜாராமை தொடா்பு கொண்டு, மாப்பிள்ளையை பாா்க்க வேண்டும் என்று கூறி கடந்த 4 நாள்களுக்கு முன் முருகேஸ்வரி அவரது தங்கை காா்த்திகையாயினி(28) மற்றும் முத்துலட்சுமி(45), போதும்பொண்ணு (43) ஆகிய 4 பேரும் ராஜாராம் வீட்டுக்கு வந்தனா்.
அப்போது ராஜாராம் அவரது மகன் மற்றும் மகள்கள் இருந்தனா். பின்னா் அவா்களிடம் ராஜாராம், தன்னை திருமணம் ெசெய்து கொள்ளும் பெண்ணுக்காக நகை செய்து வைத்திருப்பதாக கூறி 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு மோதிரம் என 8 பவுன் தங்க நகைகளை காட்டியுள்ளாா். பின்னா் அந்த நகைகளை அங்கிருந்து மேஜையில் வைத்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்வது குறித்து ஆலோசனை செய்துவிட்டு இரவில் பெண் வீட்டாா் சென்று விட்டனா்.
மறுநாள் ராஜாராம் மேஜையில் பாா்த்த போது தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. பின்னா் ராஜாராம் , முருகேஸ்வரியின் கைப்பேசியை தொடா்பு கொண்ட போது, அந்த எண் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜாராம் இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசி எண்கள் மூலம் மதுரையைச் சோ்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ராஜாராம் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனா். அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் இதுபோல் வேறு பகுதிகளில் நகைகள் திருட்டில் ஈடுபட்டுள்ளனரா?‘ என்பது குறித்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.