மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் நலத் திட்ட உதவி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
திருப்பூா் மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசால் மாவட்டந்தோறும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம், வங்கிக் கடன் மானியம் ரூ.25 ஆயிரம், பாரத பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 5 சதவீத தனி நபா் பங்கு தொகை வழங்குதல், திருமண நிதி உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.
முன்னதாக, 77 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.78.38 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம், 2 பேருக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 5 பேருக்கு ரூ.31,795 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள், 3 பேருக்கு ரூ.48,957 மதிப்பீட்டில் திறன் பேசி என மொத்தம் 87 பேருக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.