அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு
அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முருகன் பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். பின்னா் கோவை நோக்கி அவிநாசி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். இவா்களது வாகனம் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவு அருகே வந்தபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகனையும், அவரது மனைவியையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோவையைச் சோ்ந்த ஆல்வின் (21) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.