TNPSC: நெருங்கும் குரூப் 1, 1A தேர்வு; 2 மாதத்தில் தயாராவது எப்படி? - விளக்கும் தேர்வு பயிற்றுநர்
TNPSC குரூப்-1 மற்றும் குரூப்-1A தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப்-1க்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்று போட்டித் தேர்வு பயிற்றுநர் நித்யா செல்வகுமாரிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

நித்யா செல்வகுமார் பேசுகையில், "இந்த 70 பணியிடங்களுக்கான தேர்வை லட்ச கணக்கான பேர் எழுதத் தயாராக இருப்பார்கள். அதனால் போட்டி அதிகமாக இருக்கும். முதன்மைத் தேர்வைப் (Preliminary Exam) பொறுத்தவரை பயப்பட தேவையில்லை. முடிந்த அளவிற்கு சமயோஜிதமாக செயல்பட வேண்டும். இனி இருக்கும் இந்த இரண்டு மாதத்தில் புதிதாக ஒன்றைப் படிக்க வேண்டாம். முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்தி படிக்கலாம்.
குறிப்பாக பாலிட்டி, ஹிஸ்ட்ரி, ஆப்டிடியூட் இந்தத் தலைப்புகளில் எல்லாம் பெரும்பாலும் எளிதாக சரியான விடையை எழுத முடியும். இந்திய அரசியலமைப்பு, இந்திய வரலாறு குறித்து அதிகமான கேள்விகள் வரும். அதில் கவனம் செலுத்தி படிக்கலாம். இதற்கு அடுத்து ஜியோகிராஃபி, எக்கனாமிக்ஸ், தமிழ் சமூகவியல் தலைப்புகளில் கவனம் செலுத்திப் படிக்கலாம். தமிழில் இலக்கியம் சார்ந்த கேள்விகள் அதிகம் வரும். ஆனால் இந்த கடைசி இரண்டு மாதத்தில் இலக்கியத்தை முழுமையாகப் படிக்க முடியாது.

அதனால் அடிப்படையான சில விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல திருக்குறளில் குறைந்தபட்சம் 8 கேள்விகளாவது வரும். தமிழ்நாட்டின் வரலாறு, திட்டங்கள் போன்றவற்றை தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. கடந்த மூன்று ஆண்டுகளில், நடப்பு நிகழ்வுகள் குறித்த கேள்விகள் வரவில்லை என்று அதில் கவனம் செலுத்தாமல் இருக்கக்கூடாது. அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குறைந்தப் பட்சம் 200 கேள்விகளுக்கு 140 கேள்விகளுக்காவது பதில் அளித்திருக்க வேண்டும். இதில் பாலிட்டி, ஹிஸ்ட்ரி, ஆப்டிடியூட்டில் மட்டும் 80-க்கும் மேல் எடுக்க வேண்டும். இந்தத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. அதனால் துணித்து எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம். தவிர நிறைய மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்க்கவேண்டும்.

அப்போதுதான் விடை அளிக்கும் திறன் மேம்படும். டிஎன்பிஎஸ்சி துறைசார்ந்த தேர்வுகளை நடத்தியிருக்கும். அதன் General Studies-தாளை எடுத்துப் படிக்க வேண்டும். அதனைப் படித்தால் எப்படி கேள்வி கேட்பார்கள் என்று நமக்கு நிச்சயம் ஒரு ஐடியா கிடைக்கும்.