திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!
UPSC/TNPSC: மில் தொழிலாளியின் மகள் RDO ஆன கதை இதுதான் - பகிரும் ஆர்.டி.ஷாலினி
சிறிய ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று இளம் வயதிலேயே வருவாய் கோட்டாட்சியராக மதுரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் ஆர்.டி.ஷாலினி.

குடும்பச் சூழலை மனதில்கொண்டு, பொறுப்புடன் படித்து, உலகத்தின் போக்கை கவனித்து, தன்னம்பிக்கையுடன் முயற்சியும் பயிற்சியும் செய்தால் நினைத்த இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதற்கு ஆர்.டி.ஷாலினி கடந்து வந்த பாதையை அரசு வேலை தேடுவோர் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட வருவாய் கோட்டத்துக்கு ஆட்சியராக (R.D.O) வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, "கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைதான் சொந்த ஊர். அப்பா தனபால் மில் தொழிலாளி, அம்மா ரமா பிரபா என்னையும், தம்பியையும் கவனித்துக்கொண்டே குடும்பத்தையும் பார்த்துக்கிட்டார். எளிய குடும்பச் சூழல் என்றாலும், நான் நல்லா படிச்சு வருவேன் என்ற நம்பிக்கையோடு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தார்கள். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளியில் ஸ்டேட் போர்டு சிலபஸில் படித்தேன்.
சின்ன வயசுல அரசு வேலைக்குப் போகணும் என்று பெற்றோரோ, உறவினர்களோ ஆசை காட்டவில்லை. பத்தாம் வகுப்பு டீச்சர்தான் 'நீ நல்லா படிச்சு கலெக்டரா வந்துடு' என்று மோட்டிவேட் பண்ணுனாங்க. அந்த வார்த்தைகள் தந்த உற்சாகம் எனக்குள் உந்துதலை ஏற்படுத்த படிப்பில் கவனம் அதிகமானது. பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் வாங்கினேன், அதனால் ஸ்கால்ர்ஷிப் கிடைக்க, அங்கேயே பிளஸ் டூ வரை படித்தேன். பிளஸ் டூவிலும் நல்ல மதிப்பெண் கிடைத்தது. பின்பு மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பி.எஸ்.சி அக்ரி சேர்ந்ததன் மூலம் எங்க குடும்பத்தில் கல்லூரிக்கு செல்லும் முதல் ஆளானேன்.

படிச்சுட்டு இருக்கும்போதே யூ.பி.எஸ்.சி எக்ஸாமுக்கும் தயாராகிட்டு இருந்தேன். பள்ளியிலிருந்து கல்லூரி வரைக்கும் எனக்கு எல்லா ஆசிரியர்களும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. கல்லுரி முடித்ததும் பயிற்சி மையத்தில் சேர நினைத்தபோது அதற்கான பொருளாதாரப் பின்புலம் இல்லை. காலேஜ் டாப்பர்ங்கிற்தால நேஷனல் ஃபுட் செக்யூரிட்டி மிஷன்ல டெக்னிகல் அசிஸ்டெண்டா மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். இங்கு 6 மாதம் மட்டுமே வேலை பார்க்கணும்னு திட்டமிட்டிருந்தேன். அதில் வந்த சம்பளத்தை சேமித்து வைத்து, யூ.பி.எஸ்.சி பயிற்சியில் சேர சென்னைக்குக் கிளம்பிட்டேன், அங்கு என்னைப்போலவே படிக்க வந்தவர்களோடு சேர்ந்து, ஷேர் செய்து வீடெடுத்துத் தங்கி, குறைந்த கட்டணம் வாங்குகிற இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானேன். இரண்டு வருடம் யூ.பி.எஸ்.சி-யில் மட்டும் கவனம் செலுத்தினேன். அதில் கடைசி நேரத்தில் கொஞ்சம் மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது. அதனால் எல்லா வகையான எக்ஸாமும் எழுத ஆரம்பித்தேன். ஆர்.பி.ஐ எக்ஸாம், நபார்டு எக்ஸாம், அக்ரி ஸ்பெஷல் ஆபிசர் எக்ஸாம் என்று சளைக்காமல் எழுதிக்கொண்டே இருந்தேன். இந்த நிலையிலதான் 2019 -ல் குரூப் -1 எக்ஸாம் ரிசல்ட்டும், குரூப்-2 எக்ஸாம் ரிசல்ட்டும் சக்சஸாக வந்ததும், போட்டித் தேர்வுகளில் ஒரே ஆண்டில் அதிகமான சக்சஸ்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. குரூப்-1, நல்ல வாய்ப்புங்கிறதால டி.எஸ்.பி-யா ஜாயின் பண்ணிட்டேன். அதே நேரம், ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே பிரில்ம்ஸ் கொடுத்து வச்சிருந்ததன் மூலம் இண்டர்வியூவில் செலக்ட் ஆனதால் டெபுடி கலெக்டராக விருதுநகர்ல ட்ரெயினிங்கிற்காக நியமித்தார்கள்.
அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ-வாக மதுரைக்கு மாற்றப்பட்டேன்" என்று உற்சாகமாக பேசியவர், தொடர்ந்து, "இந்த நேரத்துல முக்கியமான விஷயம் ஒன்றை சொல்லணும், நாம என்ன படிக்கிறோம், என்ன வேலையில் சேரப்போகிறோம் என்ற எந்த விவரமும் தெரியாவிட்டாலும் நம்ம பிள்ளை நல்லா வரணும் என்று நினைத்து முழு சுதந்திரம் கொடுத்து ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தது என் அம்மாதான். அவங்க என்னிடனிமிருந்து எதையும் எதிர்பார்க்காவிட்டாலும், அவருக்கு எப்போதும் மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அப்பா பெயருடன் அவருடைய பெயரையும் என் இனிஷியலா சேர்த்து கெஸட்ல பதிவு செய்து பயன்படுத்திக்கிட்டு வருகிறேன். அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. 2019 பேட்ச் டி.எஸ்.பி-யான சபரிநாதனுடன் 2022-ல் திருமணம் ஆனது. எங்கள் குழந்தை ப்ரீகேஜி போகிறார். எனக்கு கிடைத்த இந்தப் பொறுப்பு மூலம் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கவும், ஏழைப் பிள்ளைகளும், கிராமப்புற பிள்ளைகளும் படித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு வர வழிகாட்டி உதவ வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறேன்." என்றார்.

மதுரை கோட்டாட்சியர் ஆர்.டி.ஷாலினி, வருகின்ற மார்ச் 23-ம் தேதி (ஞாயிறு) மதுரை அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து நடத்தும் UPSC / TNPSC Group I,II தேர்வுகளில் வெல்வது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பாக வருமான வரித்துறை ஆணையர் வி.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பலன்பெற கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.