தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசாதத்திற்கு தடை!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கோயிலுக்கு பக்தர்கள் தேங்காய் மற்றும் பிரசாதம் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய் மூலம் வெடிகுண்டு எடுத்து வரப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சித்தி விநாயக் கோயில் டிரஸ்ட் தலைவர் சதா சர்வான்கர் கூறுகையில்,'' போலீஸார் மற்றும் மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கோயிலுக்குள் பக்தர்கள் தேங்காய் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நாட்களுக்கு இத்தடை?
பிரசாதத்திலும் விஷம் கலக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே கோயில் வளாகத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் இரண்டு நாட்களில் இருக்கும் கையிருப்பு பொருட்களை காலி செய்யும்படியும், புதிதாக வாங்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக எந்த வித அச்சுறுத்தலும் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு நாட்களுக்கு இத்தடை இருக்கும் என்று சொல்ல முடியாது. பக்தர்கள் அருகம்புல், பூக்களை விநாயகருக்கு படைக்கலாம். பெரிய மாலைகள் கூட கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது''என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசு பாகிஸ்தான் மீது நடத்திய சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததற்கு இதே கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2006 மற்றும் 2007ம் ஆண்டு இது போன்று பிரசாதம் மற்றும் தேங்காயிக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.