நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி த...
UPSC/TNPSC: அரசு வேலையைத் தேர்வு செய்பவரின் எண்ணம் எப்படியிருக்க வேண்டும்? - நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் 23-ம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் சிறப்புரை வழங்குவதற்காக மதுரை வருவாய் கோட்டாட்சியர் R.D.ஷாலினி கலந்து கொள்ளவிருக்கிறார். அவருடன் இணைந்து இந்திய வருமானவரித்துறை கமிஷனர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றவிருக்கிறார். இதுமட்டுமின்றி மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான ஊக்க உரையை வழங்குவதற்கு King Maker IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ள நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அரசாங்க வேலையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “எல்லோரும் டிகிரி முடித்தால்தான் வேலை கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10-ம் வகுப்பு படித்தாலே அரசு வேலை இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. 10-th முடித்தால்போதும் மாநில அரசாங்கம் மட்டுமின்றி, மத்திய அரசாங்கத்திலும் வேலை இருக்கிறது. அதுமட்டுமின்றி ராணுவம், பாதுகாப்புப் படை போன்வற்றிலும் சிப்பாயாக சேர முடியும்.
அதேபோல 12-ம் வகுப்புப் படித்தவர்களுக்கும் அரசு வேலை இருக்கிறது. அதற்கென்று நிறைய தேர்வுகள் இருகின்றன. ஆனால் நிறைய மாணவர்களுக்கு எதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும் என்ற தெளிவு இருப்பதில்லை. B.SC Physics படித்தால்கூட நம்மால் அரசாங்க வேலையில் பணிபுரிய முடியும். இஸ்ரோ, ஆய்வகம் போன்றவற்றில் குறிப்பிட்ட பணிகளில் சேர முடியும். ஆனால் இதுவும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரியாது. அதேபோல டிகிரி முடித்தவர்களுக்கு கல்வித் தகுதியைச் சார்ந்து நிறைய அரசாங்க வேலை இருக்கிறது. அதைத் தேடுபவர்களின் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தனியார் வேலை என்றால் நிறைய பிரச்னை இருக்கிறது. இதுவே அரசு வேலை என்றால் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற சிந்தனை ஒருவருக்கு இருக்கக்கூடாது. ஒருவர் IAS ஆக வேண்டும் என்று நினைக்கிறார் என்றால் சிந்தனையும் செயலும் சரியாக இருக்க வேண்டும். கடமைக்கு என்று செயல்படக்கூடாது.

சமூகத்தில் உள்ள அவலங்களை சரி செய்ய வேண்டும் என்ற உணர்வு வர வேண்டும். நீதியுடனும், நேர்மையுடனும் இருக்க வேண்டும். ‘கற்க கசடற’ என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். இன்றைய தலைமுறையினருக்கு உயர்வான ஆளுமைக்கு உரிய சிந்தனை இருக்க வேண்டும். அறிவை சரியாகப் பயன்படுத்துவதற்கான பக்குவம் இருக்க வேண்டும். கல்வித் தகுதியுடன் சேர்ந்து சரியான ஆளுமை இருந்தால்தான் வாழ்வில் வெற்றி அடைய முடியும். நாம் எதுவாக ஆக வேண்டும் என்பதில் வலுவாக இருக்க வேண்டும்” என்று உத்வேகமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்