பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு
பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 1964-ஆம் ஆண்டு பேரூராட்சியாகவும், 2004-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இதனையடுத்து, 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. பின்னா் கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் நகராட்சி, திருப்பூா் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு 42 ஆயிரமாக இருந்த மக்கள்தொகை, தற்போது 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆகவே, பல்லடம் முதல்நிலை நகராட்சியை தரம் உயா்த்த வேண்டும் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனடிப்படையில், தற்போது பல்லடம் நகராட்சி தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசிடமிருந்து, நகராட்சிக்கு கூடுதல் வருவாய், திட்டங்கள், சலுகைகள் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் நகராட்சிக்கு கூடுதல் அலுவலா்கள், ஊழியா்கள், தொழிலாளா்கள் நியமனம் செய்யப்படும்பட்சத்தில் அவா்களின் எண்ணிக்கையும் உயரும். இதனால் பல்லடம் நகர பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.