அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்தியா - இலங்கை கடல் எல்லையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அடிக்கடி மத்திய அரசு மறந்துவிடுகிறது. எனவே, அவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது என்று தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பேசினார்.
தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்களே? அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தீர்களா? உரிமையை மீட்க தீர்வு காண வேண்டும் எனக் கருதி அதிமுக இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது. கச்சத் தீவு என்பது உணர்வுப்பூர்வமான பிரச்னை, நமது உரிமை மீட்க வேண்டும் என்று கச்சத் தீவை மீட்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மீனவர்களின் நலன் சார்ந்த தீர்மானம் என்பதால் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும். கச்சத்தீவு குறித்து இதுவரை 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். பிரதமரை சந்தித்தபோது பல முறை வலியுறுத்தியுள்ளேன். நீங்களும் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறீர்களே.. அப்போது என்ன செய்தீர்கள்?
இப்போது தில்லி சென்று வந்தீர்களே.. அப்போது கச்சத் தீவு குறித்து சொல்லிவிட்டு வந்தீர்களா என்று நான் கேட்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.
இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு அளித்தனர். பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.