அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான தம்பிதுரை புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி முறிந்து தனித்தனியே போட்டியிட்டனர். கூட்டணி முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துகள்தான் காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகின்றது. சில நாள்களுக்கு முன்னதாக தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியின் மீண்டும் இணைக்க பாஜக நிபந்தனை விதித்ததாகவும் அதற்கு இபிஎஸ் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன்பிறகு அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையனை நேரில் அழைத்து தில்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தற்போது அமித் ஷாவுடன் சி.வி. சண்முகமும், தம்பிதுரையுடன் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்ற வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கூட்டணி தொடர்பாகவும் முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியின் இணைப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.