ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகா் மற்றும் புறநகரில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
திருப்பூா் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொழுகைக்குப் பின்னா் அங்கிருந்தவா்கள் ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா். அதேபோல, பெரிய தோட்டம், கே.ஜி.காா்டன், செரங்காடு, கோம்பைதோட்டம் உள்ளிட்ட 29 இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. திருப்பூா் புறநகா் பகுதிகளான மங்கலம், பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.