வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவனை மாட்டிவிட்ட மனைவி
வாட்ஸ்ஆப்பில் பல தனிப்பட்ட ரகசியங்கள் இருக்கும் என்பதால் பலரும் அதற்கு லாக் போட்டு வைப்பது வழக்கம். வீட்டில் மனைவிமார்கள் தங்களது கணவனின் வாட்ஸ்ஆப்பை பார்க்க விரும்பினாலும் அதனை கணவன்மார்கள் பார்க்க அனுமதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.
மகாராஷ்டிராவில் ஒரு பெண் தனது கணவனின் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்து பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். நாக்பூரை சேர்ந்த சுனந்தா(24) என்ற பெண் தனது கணவரிடம் போனை கொடுங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டார். ஆனால் அவரது கணவர் போனை கொடுக்கவில்லை. அப்படியே கொடுத்தாலும் அவரது வாட்ஸ் ஆப்பை பார்க்க முடியாத படி லாக் செய்து இருந்தார்.
முன்னதாக, சுனந்தா தனது கணவர், தன்னிடம் இயற்கைக்கு மாறாகவும், ஆபாச படங்களில் வருவது போன்றும் உறவு வைத்துக்கொள்ள சொல்லி துன்புறுத்துவதாக கூறி ஏற்கனவே போலீஸில் புகார் செய்திருந்தார்.

எனவே கணவருக்கு வேறு பெண்களுடம் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்பினார். இதனால் சுனந்தாவிற்கு எப்படியும் தனது கணவரின் வாட்ஸ் ஆப்பை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து தெரிந்த நண்பர்களிடம் பேசி வாட்ஸ்ஆப் லாக்கை எப்படி ஹேக் செய்யவேண்டும் என்று கற்றுக்கொண்டார். அதனை பயன்படுத்தி கணவனின் வாட்ஸ் ஆப்பை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். அதில் சுனந்தாவின் கணவர் பல பெண்களுடன் ஆபாசமாக பேசியிருப்பதும், பல பெண்களை கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்திருப்பதும், உறவு வைத்திருப்பதும் தெரிய வந்தது. அது தொடர்பாக வீடியோக்கள், சாட்டிங் விபரங்களும் இருந்தன.
இதில் 19 வயது பெண் ஒருவரும் அடங்கும். தனது பெயரை மாற்றி பெண்களை கோயிலுக்கு வரவழைத்து அவர்களுக்கு சுனந்தாவின் கணவர் பாலியல் தொல்லை கொடுத்து இருந்தார். பெண்களிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று சொல்லி அவர்களை தனது ஆசைக்கு இணங்க வைத்து அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்தார். அதில் உள்ள சில பெண்களை சுனந்தா தொடர்பு கொண்டார். அவர்களிடம் பேசியதில் 19 வயது பெண் சுனந்தாவின் கணவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்ய சம்மதித்தார். 19 வயது பெண் நாக்பூரில் தங்கி படித்து வந்தார்.
அவரிடம் தனது பெயரை சாஹில் சர்மா என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார். அதோடு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவு வைத்திருக்கிறார். 19 வயது பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுனந்தாவின் கணவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார். அப்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுத்து பேசவைத்தோம். அப்பெண்ணின் மோதிரத்தை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர் எடுத்துச்சென்றுள்ளார் என்றார்.