Ghibli Art: 40 ஆண்டுகளாக இருக்கும் `ஜிப்லி ஆர்ட்' - திடீரென இணையவாசிகளிடம் டிரெண்டானது எப்படி?
சமூக வலைதளங்களில் தற்போது ஜிப்லி ஆர்ட் என்ற பெயரில் டிரண்டாகி வரும் அனிமேஷன் புகைப்படங்களை பார்த்திருப்போம். 1985லேயே இது போன்ற அனிமேஷன்கள் உருவாக்கப்பட்ட நிலையில், திடீரென இணையவாசிகள் மத்தியில் பிரபலமடைய என்ன காரணம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
சாட் ஜிபிடி புதிதாக ஒரு அப்டேட் கொண்டுவந்துள்ளது. அதனை பயன்படுத்தி தங்களின் புகைப்படங்களை அனிமேஷன் முறையில் மாற்றிக்கொள்ளலாம்.
தனிநபர், சமூக ஊடக பயனர்களைத் தாண்டி சில நிறுவனங்களும் இந்த முறையை தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன.

40 ஆண்டு காலமாக இருக்கும் ஜிப்லி
ஜப்பான் நாட்டில் 1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை 'ஜிப்லி' படங்கள் என்று குறிப்பிட்டனர்.
இந்த படங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் கதை மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்க உதவியுள்ளது. இதனால் வெகு ஜனங்களை இந்த ஜிப்லி படங்கள் சென்றடைந்து இருக்கிறது.
தற்போது எப்படி டிரெண்டானது?
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த ஜிப்லி ஆர்ட் அனிமேஷன் முறை தற்போது திடீரென இணைவாசிகளிடம் பிரபலமானது ஏன் என்று பலரும் யோசிக்கலாம்.
அதற்கு காரணம் சாட் ஜிபிடிதான் (Chat GPT). சாட் ஜிபிடி புதிதாக ஒரு அப்டேட் கொண்டுவந்தது. அதன் மூலம் ஒரு பயனர் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து அதனை அனிமேஷன் பாணியில் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த அப்டேட்டின் செயல்முறையில் உள்ள எளிமையும், பயனர்களுக்கு வசதியான அணுகல்முறையும் தான் இது இவ்வளவு விரைவாக பிரபலமாக காரணமாக இருந்தது. இணையவாசிகளிடையேயும் டிரெண்டானது.