`இது கிராமமா கேன்சர் மண்டலமா?’ - அதிர்ச்சியில் ஆந்திர அரசு - விளக்கம் தரும் மருத்துவர்
இது கிராமமா அல்லது இந்தியாவின் புற்றுநோய் மண்டலமா என்று தகவல் தெரிந்த பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலபத்ரம் என்கிற சிறு கிராமம். அப்படி என்ன நிகழ்ந்து விட்டது அந்தக் கிராமத்தில் என்கிறீர்களா?

2022-ல் உலக சுகாதார அமைப்பின் இணை நிறுவனமான குளோபல் கேன்சர் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தச் கிராமத்தில், தேசிய சராசரியின் படி, 10 அல்லது 11 பேருக்கு புற்றுநோய் இருக்கலாம். ஆனால், அந்தக் கிராமத்தில் 32 பேருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதில் 17 பேருக்கு சிகிச்சைகள் முடிந்து விட்டதாகவும் 15 பேருக்கு சிகிச்சை நடந்துக்கொண்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறார். அதாவது 3 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதேநேரம் அந்தக் கிராமத்தில் 100 பேருக்கும் மேல் புற்றுநோய் இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் பரவுகிறது.
என்ன தான் பிரச்னை?
தாய்க்கு கேன்சர் சிகிச்சை முடிந்து மீண்ட நிலையில், 26 வயதான மகளுக்கு குடல் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, இன்னொரு குடும்பத்தில் வயல் வேலைகளுக்கு சென்றுகொண்டிருந்த மகளுக்கு தொண்டையில் புற்றுநோய் வந்ததால் அவருடைய வயதான தாய் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வருகிறார். இப்படி புற்றுநோய் பாலபத்ரம் கிராமத்து மக்களின் நிம்மதியையும் உயிரையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.
அம்மாவட்டத்தின் ஆட்சியர் பிரசாந்தி ’தொண்டை, குடல், மார்பகம், கருப்பை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான புற்றுநோய் இருக்கிறது’ என்று வேதனைப்பட்டிருக்கிறார். இக்கிராமத்தின் நிலைமை ஆளும் அரசாங்கம் வரை தெரியவர, நடமாடும் புற்றுநோய் பரிசோதனைப் பிரிவையும் ஒரு பெரிய மருத்துவ முகாமையும் அக்கிராமத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.
சென்ற வாரம் 50 மருத்துவர்கள் உள்ளிட்ட 200 மருத்துவப்பணியாளர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று யாருக்கெல்லாம் புற்றுநோய் அறிகுறிகள் இருக்கின்றன; யாருடைய கேஸ் ஹிஸ்டரியில் புற்றுநோய் இருக்கிறது என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். தவிர, சமீபத்தில் இறந்தவர்கள் எப்படிப்பட்ட நோய் அறிகுறிகளுடன் இறந்தார்கள் என்பதையும் விசாரித்து பதிவு செய்திருக்கிறார்கள். கூடவே விசாகப்பட்டினம், காக்கிநாடா, ராஜமுந்திரி போன்ற மாவட்டங்களில் இருக்கிற புற்றுநோய் ஆய்வாளர்கள் பாலபத்ரம் கிராமத்திற்கு சென்று காற்று, நீர் உள்ளிட்ட மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்று இருக்கிறார்கள்.
அவற்றின் பரிசோதனை முடிவுகளுக்கு பின்னால்தான் இத்தனை பேருக்கு புற்றுநோய் வந்ததற்கு என்னக் காரணம் என்பதை கண்டறிய முடியும்.
மருத்துவர் என்ன சொல்கிறார்?
இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளில் ஆந்திர அரசு முழுமூச்சாக இறங்கியுள்ளது. இந்த செய்தியையொட்டி புற்றுநோய் மருத்துவர் கங்காதரன் அவர்களிடம் பேசினோம்.

’’புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது உண்மைதான். கூடவே, மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து விட்டதால் அதன் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவ பரிசோதனை செய்துபார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனாலும் கேன்சர் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்து விட்டது போல் தோன்றலாம். கேன்சர் வருவதற்கான காரணங்கள் எப்போதும் போல மாசுபட்ட காற்று, முறை இல்லாத உணவு, சரி இல்லாத வாழ்க்கை முறைகள், பரம்பரைத்தன்மை, சிலருக்கு காரணம் தெரியவில்லை என்று அதே தான் இருக்கின்றன.
இதில், கருப்பை வாய் புற்றுநோய்க்கு ’ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ தான் காரணம். இதைத் தடுப்பதற்கு தான் நம்மிடம் தடுப்பூசி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னால் தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் கூட இந்த தடுப்பூசிப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 14 வயதுக்கு மேல் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னால் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதற்காக திருமணமானவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் பலன் இருக்காது என்று அர்த்தம் இல்லை. தாம்பத்திய உறவு ஆரம்பிப்பதற்கு முன்னால் போட்டுக்கொள்வதைவிட அதன் பிறகு இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளும்போது அதன் வீரியம் சற்றுக் குறைவாக வெளிப்படலாம். இந்த தடுப்பூசியிலேயே பூஸ்டர்கூட இருக்கிறது. அந்த செய்தியில் உள்ள கிராமத்தில் ஏன் இந்த அளவுக்கு புற்றுநோய் அதிகரித்து விட்டது என்பதற்கான பதில் ஆய்வாளர்கள் எடுத்துச் சென்ற மாதிரிகளில்தான் இருக்கிறது. அவர்கள் அதை வெளியிட்டு வெளியிடும் வரை அந்தக் கிராமத்தின் புற்றுநோய் பெருக்கத்திற்கான காரணம் பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது’’ என்கிறார் டாக்டர் கங்காதரன்.