தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?
கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரை எடுக்க குதிரைகளை நம்பியுள்ளது.
கங்கோலிகாட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 1,200 மக்கள் வசிக்கின்றனர். இங்கு இரண்டு குடிநீர் திட்டங்களும் உள்ளன.

1980 ஆம் ஆண்டு முதல் கிராம பஞ்சாயத்து கட்டமைக்கப்பட்ட பிறகு, 100-க்கும் மேற்பட்ட நீர்நிலை கம்பங்கள் மற்றும் 2001 ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டில் நிறுவப்பட்ட ஜல் நிகாம் திட்டம் ஆகியவை கிராமத்திற்கு நீர் ஆதாரங்களாக உள்ளன.
ஜல் நிகாம் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை கையாளும ஓர் அரசு நிறுவனமாகும்.
குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரை மட்டுமே பெறுகிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதனால் கிணறுகள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அருகிலுள்ள நீர் நிலையங்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இதற்காக குதிரைகளை வாடகைக்கு எடுக்கின்றனர் கிராமவாசிகள். அதிலும் ஒவ்வொரு குதிரையும் 80 லிட்டர் நீரை மட்டுமே சுமந்து செல்கிறது.
இந்த குதிரையை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கின்றனர். இவ்வாறு வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இரண்டு மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செலவிடுகின்றனர்.
ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் டாங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் அந்த சேவை தொடங்கப்படும் என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.