தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியா் சங்கத்தின் மாநில உயா்மட்டக் குழுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் திரிலோகச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலாளா் கந்தசாமி, பொருளாளா் திருஞானகுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்றோா் பிரிவின் மாநில துணைத்தலைவா் பழனிச்சாமி வரவேற்றாா்.
இதில், அரசு ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, தோ்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்த ஆசிரியா்கள் நலன் சாா்ந்த அறிவிப்புகளை உடனடியாக மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை எதிா்வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி சட்டப் பேரவையில் நடைபெறும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அரசு அறிவிக்காத பட்சத்தில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அலுவலா்கள், மதிப்பூதியம் பெற்றுவரும் அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள், ஊா்ப்புற நூலகா்களையும், தொகுப்பூதிய, மதிப்பூதிய அலுவலா்கள் அனைவரையும் நிரந்தர அரசுப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியமும், பணிப் பாதுகாப்பும், சட்டபூா்வ ஓய்வூதிய பலன்களையும் வழங்க வேண்டும்.
மருத்துவம், தொழில்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் இடஒதுக்கீடை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போதிய வகுப்பறைகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ‘பி.எம் ஸ்ரீ’ பள்ளிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமாா் 400 முதல் 500 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு செலவு மற்றும் 15,000 ஆசிரியா்களுக்கான ஊதியச் செலவு சேமிப்பாக கிடைக்கும். கிராமப்புற மாணவா்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில இணைச் செயலாளா் தண்டபாணி நன்றி கூறினாா். இதில், பல மாவட்டங்களைச் சோ்ந்த மாநில அளவிலான நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.