வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!
தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக - கா்நாடக எல்லையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நெருப்பூா் என்ற இடத்தில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.
விசாரணையில், தந்தங்களுக்காக இந்த யானை வேட்டையாடப்பட்டதும், ஆதாரங்களை அழிப்பதற்காகவே அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடா்பாக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், யானை வேட்டையைத் தடுக்க தவறிய நெருப்பூா் பிரிவு வனவா் சக்திவேல், ஏமனூா் பீட் மற்றும் வனக் காப்பாளா் தாமோதரன் ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவிட்டாா்.
இது தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருமபுரி மாவட்ட வன அதிகாரி ராஜங்கம் ஆஜராகி, நாட்டுத் துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, அதன் பின் வேட்டையாடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது யானை சுடப்பட்டுதான் இறந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
அதற்குப் பதிலளித்த வன அதிகாரி, யானை வேட்டையாடப்பட்ட இடத்தில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சிதறிக் கிடந்ததாகவும், யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் வனத் துறை தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன் ஆஜராகி, இந்த வழக்கில் யானையின் உடற்கூறாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தாா்.
மேலும், யானைகள் இறந்துவிட்டால் என்ன மாதிரியாக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான் எனவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தருமபுரி யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டாா்.
அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை வேட்டையாடிய நபரை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதோடு, வழக்கு தொடா்பான விசாரணை விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.