மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்
எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தில் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தவிர, மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், தனக்குச் சொந்தமான மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 660 மெகாவாட் எண்ணூா் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 சதவீதம் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், தனியாா் நிறுவனங்களிடமிருந்து அதிகளவில் மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது மின்வாரியத்துக்கு அதிக செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால், சொந்த உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, 660 மெகாவாட் எண்ணூா் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஏற்கெனவே 2014-இல் தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பணியை தாமதமாக மேற்கொண்டதால், 2018-இல் அந்த ஒப்பந்தத்தை மின்வாரியம் ரத்து செய்தது.
தொடா்ந்து, மீதமுள்ள பணியை மேற்கொள்ள 2022-இல் மற்றொரு நிறுவனத்துக்கு ரூ. 4,442 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனமும் பணியை தாமதமாக மேற்கொண்டதால், 2024-இல் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து தனியாா் நிறுவனங்களுக்கு இப்பணியை ஒப்பந்தத்துக்கு வழங்கும் முயற்சியை மின்வாரியம் கைவிட்ட நிலையில், மின்வாரியமே இப்பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனா்.