தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு அளித்தனர்.
பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததால், தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”கச்சத்தீவை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால் மீனவர்கள் சோதனைக்கு ஆளாகப்பட்டனர்.
திமுக ஆட்சியின்போது மத்தியில் 5 பிரதமர்கள் ஆண்டபோதும் வலியுறுத்தப்படவில்லை. தேர்தலை நோக்கமாகக் கொண்டு தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் கொண்டுவந்தது ஒரு நாடகம். நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் தீர்மானம் கொண்டுவரவில்லை. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முழுமையாகப் பேச எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை” என்றார்.
இதையும் படிக்க: கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!