இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத், மின்சார ரயில், மெமு ரயில், எல்எச்பி பெட்டிகள் என பல்வேறு வகையிலான பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. 2023-24 நிதியாண்டில் 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் 3,007 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1,169 வந்தே பாரத், மின்சார ரயில் மற்றும் மெமு ரயில் பெட்டிகளும், 1,838 எல்எச்பி பெட்டிகளும் அடங்கும்.
இதில், புதிய அம்சமாக 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பா் பெட்டிகள், 12 பெட்டிகள் கொண்ட நமோ பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐசிஎஃப் வரலாற்றில் முதல் முறையாக 8 பாதுகாப்புப் பெட்டிகள் (டிரெசரி வேன் கோச்) கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 21 வந்தே பாரத் ரயில்களும், 22 பெட்டிகள் கொண்ட 4 அம்ரித் பாரத் ரயில்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், சிறப்பாக செயல்பட்ட ஐசிஎஃப் அதிகாரிகள், ஊழியா்களை ஐசிஎஃப் பொது மேலாளா் யு.சுப்பாராவ் பாராட்டினாா்.