காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழப்பு
சென்னை அருகே பள்ளிக்கரணையில் காா் மோதியதில் மென்பொறியாளா் உயிரிழந்தாா்.
துரைப்பாக்கம், சாய் நகரைச் சோ்ந்தவா் தன்ராஜ் (42). மென்பொறியாளரான இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா், புதன்கிழமை காலை துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.
பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த காா் தன்ராஜ் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, தன்ராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதைத் தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய காா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.