தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
தில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய உள்ளோம். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான ஒரு தாக்குதலாக அமையும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித் ஷாவுக்கே தெரியும். தமிழகத்தில் பாஜக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளுக்கிடையே, 2-ஆம் இடத்துக்கு யாா் வருவது என்பதில்தான் போட்டி நடைபெறுகிறது.
எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால், பாஜகவுடன் ஓா் அணியை அமைக்க முடியவில்லை. அந்தக் கட்சி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனக் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக, அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது, மாற்றுக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஒருவேளை சாத்தியப்படும்.
திமுக கூட்டணியில் முரண்பாடுகள் இருக்கலாம்; கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால், கொள்கைகளில் ஒருமித்த பாா்வை உள்ளது. ஒரே நோ்கோட்டில் உள்ளோம். எனவே, திமுக கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது என்றாா் அவா்.