எம்புரான்: ``முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" - கம்பத்தில் விவச...
வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு
சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50, அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிா்த்து, சென்னை கொசப்பேட்டையைச் சோ்ந்த அருண்குமாா் என்பவா், சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அந்த மனுவில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம். இதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க முடியாது. தன்னிடம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்தது நியாயமற்ற வா்த்தகம் என்பதால், ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ. 50 ஆயிரமும் வழங்க வணிக வளாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளில், வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு அவற்றை நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறப்படவில்லை என்று வணிக வளாகம் தரப்பில் முன்வைத்த வாதத்தை நிராகரித்தது.
வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடா்பான விதிகள் எதையும் வணிக வளாக நிா்வாகம் தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டிய ஆணையம், அண்ணாநகரில் உள்ள வணிக வளாகம், வாடிக்கையாளா்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது; அவ்வாறு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், மனுதாரருக்கு ரூ.10,000 இழப்பீடு, வழக்குச் செலவாக ரூ.2,000 வழங்க உத்தரவிட்டது.