கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திரபாத திருநாள் கொடியேற்றம்!
பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் தலமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் உருத்திர பாத திருநாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பகரேஸ்வர கோயில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகப் போற்றப்படும் இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உருத்திர பாத திருநாள் விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முன்னதாக பஞ்ச மூர்த்திகள் சிறப்புப் புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோபுர தரிசனம், 8ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் 10ம் தேதி வியாழக்கிழமை தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 11ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி வைபவமும், 20ஆம் தேதி சரபேஸ்வரர் ஏக தின உற்சவமும் மகா ருத்ர ஹோமம் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு சரபமூர்த்தி வெள்ளி ரதத்தில் வீதி உலா காட்சி தருகிறார்.