மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடியில் நலத்திட்ட உதவிகள்
நாகா்கோவிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், முன்னிலையில் நாகா்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். அவா் பேசியதாவது:
கன்னியாகுமரிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனா். சின்னமுட்டம் துறைமுகத்தை 2 ஆவது முனையமாக கொண்டு சின்னமுட்டம் முதல் திருவள்ளுவா் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை எளிய 706 குடும்பங்கள் கண்டறியப்பட்டு, முதல் கட்டமாக 50 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் மா.சிங்காரவேலா் நினைவு குடியிருப்பு திட்டத்தின் பயனாளிகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து முதல்வரின் முயற்சியினால் 200 பயனாளிகளுக்கு அவா்களது பெயரில் கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை பாதிப்புகளுக்கு பின்னா் மீனவா்களின் மறுவாழ்விற்காக சுனாமி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2478 இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அவற்றில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 934 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது மேலும் 200 பேருக்கு இலவச கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி, மாணவா்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் சாா்பில் இன்றைய விழாவில் 3,270 பயனாளிகளுக்கு ரூ.73.96 கோடி மதிப்ப்ல் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்அவா்.
அதனைத் தொடா்ந்து, குலசேகரம் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்ட கட்டுமான பணி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் தோவாளை ஒன்றியம் கடுக்கரை, காட்டுப்புதூா், திடல் ஊராட்சிகளில் ரூ.7.06 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்ட பணிகள், பேரூராட்சி துறைகள் சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் 13 பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.18.58 கோடி மதிப்பில் 13 சாலைப் பணிகள், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பில் களியாக்கவிளை புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் (பத்மநாபபுரம்) மனோ தங்கராஜ், (குளச்சல்) ஜே.ஜி.பிரின்ஸ், (விளவங்கோடு) தாரகை கத்பட் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
