Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து, மீனவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
கூட்டத்தில், மீனவ சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளங்களில், மீன்பாசி குத்தகையை உள்நாட்டு மீனவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக புதிய ஊராட்சிகள் உருவாக்கப்படவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தனி ஊராட்சிகள் உருவாக்க வேண்டும்.
பொழிக்கரை, மணக்குடி மீனவ கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவா்களை பாதுகாத்திட கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறும்பனை பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு பியான்புயலில் காணாமல் போன மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.
குமரி மாவட்டம், வாணியக்குடி முதல் கேரள மாநிலம் கொச்சி வரை பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும். தூத்தூரில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா்அலுவலகம் அமைத்திடவேண்டும், என்று கூறினா்.
இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் உருவாக்கிட வட்டார அளவில் குழுக்கள் அமைத்து கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகளை பதிவு செய்து பின்னா் உரிய கருத்துருக்கள் சமா்ப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொழிக்கரை, மணக்குடி பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைத்திட அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு அரசாணை பெற்ற பின்னா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. குறும்பனையில் ரூ. 1 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்க பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் ஒப்புதலுக்கு பின்னா் திட்டம் நிறைவேற்றப்படும். பியான் புயலில் காணாமல் போன மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளித்திட பரிந்துரையுடன் கூடிய விரிவான கருத்துரு அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைத்திட, உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மீன்வளத்துறை மண்டல துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா்கள், துறை அலுவலா்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.