WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது பிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான் கேட்கிறார்கள். உண்மையில், பிரியாணியில் எது பெஸ்ட், எது ஆரோக்கியமானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

பிரியாணி பிரியர்களைக் கேட்டால், மட்டன் பிரியாணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளைக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கிறது மட்டன் பிரியாணி. அதை சுவையாகவும் சமைக்க முடியும்.
சுவையில் சூப்பராக இருக்கும் மட்டன் பிரியாணி, ஆரோக்கியத்திலும் சிறப்பானதா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், மட்டனில் கொழுப்புச்சத்து மிக மிக அதிகம். எனவே, இதய நோயாளிகள், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர் எல்லாம் இந்த பிரியாணியைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.
அவர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டால் மீன் பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி சாப்பிடலாம். அளவோடு இறால் பிரியாணி சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்களும் மட்டன் மற்றும் முட்டை பிரியாணி சாப்பிட முடியாது. அவர்களும் சிக்கன் பிரியாணி அல்லது ஃபிஷ் பிரியாணி சாப்பிடலாம்.
பிரியாணி என்றாலே அதிக கலோரி கொண்ட உணவு என்பதில் சந்தேகமில்லை. அதில் சேர்க்கப்படுகிற எண்ணெய், நெய், மசாலா பொருள்கள், அசைவம் என எல்லாம் சேர்ந்து பிரியாணியின் கலோரியைக் கூட்டுகின்றன. எனவே, அதை மாதத்தில் ஒருமுறையோ, 20 நாள்களுக்கொரு முறையோ சாப்பிடுவது சரியானது.

சிலர், தினமும் பிரியாணி சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார்கள். நள்ளிரவு, அதிகாலையில் எல்லாம் பிரியாணி சாப்பிடுவோர் இருக்கிறார்கள். அதெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். அளவோடு சாப்பிட வேண்டியதும், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியதும் இதில் மிக முக்கியம்.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், எப்போதாவது முட்டை பிரியாணி சாப்பிட நேர்ந்தால், முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம். வெஜிடபுள் பிரியாணி மிக நல்ல சாய்ஸ். ஊட்டச்சத்து ஆலோசகர்களின் பரிந்துரைப்படி, ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக காய்கறிகள் சேர்த்துச் செய்யப்படுகிற வெஜிடபுள் பிரியாணி மிகவும் ஆரோக்கியமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.