சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நேபாளம்: `மீண்டும் மன்னராட்சி பிறக்கிறதா?' தலைநகர் காத்மாண்டுவில் வெடித்த கலவரம் - பின்னணி என்ன?
காத்மண்டு தெருக்களில் ஆர்பாட்டம்
நமது அண்டை நாடான நேபாளத்தில் 21ம் நூற்றாண்டுக்கான புதிய சிக்கல் பிறந்துள்ளது. மக்கள் மக்களாட்சி அரசைக் களைத்துவிட்டு இந்து-மன்னராட்சி அரசை மீண்டும் அரியணை ஏற்ற வேண்டும் எனப் போராடத் தொடங்கியுள்ளனர்.
2008-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மதசார்பற்ற மக்களாட்சி நாடாக நேபாளம் உருவானது. ஆனால் தற்போது குடியரசில் ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் மக்களாட்சி அமைப்பின்மீதும், அரசியலமைப்பின் மீதும் மக்களுக்கு கோபம் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 28-ம் தேதி அரசியலமைப்பு - மன்னராட்சி ஆதரவாளர்கள் காத்மண்டு தெருக்களில் திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
#WATCH | Nepal: A clash broke out between pro-monarchists and Police in Kathmandu near the airport. Several rounds of tear gas and rubber bullets fired by the Police. Vehicles and a house torched. Curfew ordered in Tinkune, Sinamangal and Koteshwor area.
— ANI (@ANI) March 28, 2025
Visuals from Kathmandu… pic.twitter.com/Be0Emk8EjO
கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம்
அதில் வன்முறை எழுந்து கலவரமாக மாறியது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகை அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு தீவைத்து எரித்தனர்.
காவல்துறையினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையிலான வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்கும் நிலை ஏற்பட்டது. 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேநாளில் கலவரம் நடப்பதற்கு முன்பு நகரின் மற்றொரு பகுதியில் இடதுசாரி அரசியல் கட்சிகள் இணைந்து மன்னராட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக அமைதியான ஆர்பாட்டத்தை நடத்தினர். நேரடியாக ஆட்சியை திரும்பப்பெறும் கனவு காண வேண்டாம் என முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாக்கு எதிராகவே பேசினர்.
ஞாயிறு அன்று ஞானேந்திர ஷாவைக் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தின் ஆளும் கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். முடியாட்சிக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி, இடதுசாரி அரசாங்க ஆட்சிக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
புத்தரின் ரத்த நிலம்
நேபாளம் புத்தமதத்தின் நிறுவனரான புத்தர் பிறந்த நாடு என்றே உலகத்தாரால் அறியப்படுகிறது.
சித்தார்த்தன் ஒரு இளவரசன் ஒருநாளில் அவனது குடும்பத்தையும் ராஜ்ஜியத்தையும் துறந்துவிட்டு ஆன்மிக கேள்விகளுடன் அலைந்து திரிந்தான். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றான். பெற்ற ஞானத்தை போதித்து வந்தான்... இன்று உலகின் 4-வது மிகப் பெரிய மதம் பௌத்தம்.
சித்தார்த்தன் துறந்த ராஜ்ஜியத்தில் அவந்து வம்சம் வீழ்ந்தது. அதன்பிறகு பல்வேறு மன்னர்கள் ஆண்டனர். இன்றைய நேபாளம் பல்வேறு ராஜ்ஜியங்களாக பிரிந்திருந்தது. சில இந்திய மன்னர்களும் நேபாளத்தில் சில ராஜ்ஜியங்களை ஆட்சி செய்துள்ளனர்.

சில ஆட்சியாளர்கள் அண்டை ராஜ்ஜியமான திபெத்தை வெறுத்தார்கள், சிலர் அவர்களுடன் வியாபாரம் செய்தனர். சில அவர்களையும் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர்.
இமயமலைகளுக்கு நடுவில் இருக்கும் இந்த ராஜ்ஜியத்தில் பல போர்கள் நடந்தன, பல ரத்த சிதறல்கள், பல வீரமிக்க கதைகள் உலாவின. அவற்றில் மிகப் பெரிய கதை 1768-ல் பிருத்விநாராயண ஷாவினுடையது. சிறிய ராஜ்ஜியங்களாக இருந்த நேபாளத்தை ஒன்றிணைத்து ஷா வம்சத்தின் பெரும் குடையின் கீழ் கொண்டுவந்தார்.
பிரிட்டிஷை மிரட்டிய கூர்காக்கள்!
1846ம் ஆண்டில் ராணா வம்சம் நேபாளத்தின் அதிகாரத்தைப் பிடித்தது. ஷா வம்சம் அதிகாரமற்ற ஆனால், அந்தஸ்துள்ள குடும்பமாக சுருங்கியது.
ராணா வம்சத்தினரின் ஆட்சியில் நேபாளம் இரும்புக்கரம் கொண்டு காக்கப்பட்டது. மேற்கத்திய ஏதேச்சதிகாரத்தாலும் இரண்டாம் உலகப்போராலும் துளியும் பாதிக்கப்படவில்லை, மொத்த உலகிலிருந்தும் தனித்த ஒரு ராஜ்ஜியமாக இருந்தது.
1814 -16 ஆண்டில் ஆங்கிலோ-நேபாள் போர் நடந்தது. நேபாளத்தின் கூர்க்கா என்ற ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வீரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கிழக்கிந்திய கம்பெனி சண்டையிட்டது. இந்த சண்டையில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றிபெற்றாலும், ஆங்கிலேயர்கள் கூர்க்கா வீரர்களின் அர்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் போர்திறத்தைப் பார்த்து வியந்தனர்.
The Gurkha Museum Trust honours the Gurkhas' contributions in 1945 with the Path to Victory series, highlighting their service through monthly articles.
— The Gurkha Museum Trust (@GurkhaMuseum) March 7, 2025
This month's article covers Gurkhas in Mandalay, March 1945: https://t.co/EWXF4VJpUL#gurkha#wwII#GurkhaHistorypic.twitter.com/KP840Pr7sD
போர் முடிவதற்கு முன்னரே கூர்க்கா வீரர்களை தங்கள் படையில் சேர்க்கத் தொடங்கினர். இரண்டாம் உலகப் போரில் கூர்க்காக்கள் படை பிரிட்டிஷுக்காக சண்டையிட்டது. இன்றும் பிரிட்டிஷ் இராணுவத்தில் கூர்க்காக்களின் படையணி உள்ளது.
ஜனநாயகத்தின் எழுச்சி
1951-ல் எழுந்த ஜனநாயக ஆதரவு இயக்கம் திரிபுவ மன்னர் மற்றும் இந்திய அரசின் உதவியுடன் ராணா வம்சத்தை ஆட்சியில் இருந்து நீக்கியது. அதன்பிறகு பரிசோதனை முறையிலான நாடாளுமன்றத்துடன், குழப்பமான ஆட்சி நடைபெற்றது. நிலையற்ற அரசுகள் எழுந்தன.
1960-ல் திருபுவனின் மகன் மகேந்திரன் ஜனநாயகத்தை நசுக்கி மீண்டும் முழுமையான மன்னராட்சியை உருவாக்கினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார். பஞ்சாயத்து அமைப்பை நிறுவி 1990 வரை முடியாட்சியை நடத்தினார்.
சொந்த குடும்பத்தை படுகொலை செய்த இளவரசன்
முடியாட்சியின் விளைவாக எழுந்த பொருளாதார தேக்கநிலை மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் வெடித்தனர். மகேந்திராவின் மகன் பிரேந்திரா பல கட்சி ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு அரசியலமைப்பு முடியாட்சியின் கீழ் ஆட்சி செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
1996-ம் ஆண்டுவரை ஜனநாயகம் தடுமாறியது. மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் முடியாட்சிக்கு முடிவுகட்டவும் கம்யூனிச குடியரசை உருவாக்கவும் தசாப்தகால உள்நாட்டுப்போரைத் தொடங்கினர்.
Trek Nepal’s Gorilla Trail from the Maoist insurgency era, witnessing bunkers, meeting spots, and local resilience in a historic journey. This route mirrors the paths taken by Maoist rebels during Nepal’s civil war from 1996 to 2006. #trekmenepal#trekpic.twitter.com/ej8T1PPwsm
— TrekMeNepal (@TrekMe00) June 28, 2024
மாவோயிஸ்டுகளின் போராட்டம் சமூக ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்தியது. இந்த பெரும் மோதலில் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல லட்சம் மக்கள் இருப்பிடங்களை இழந்து குடிபெயர்ந்தனர்.
2001-ம் ஆண்டு, 29 வயது பட்டத்து இளவரச் திபேந்திரா, ஒரு அரச விருந்தில் மன்னர் பிரேந்திரா உள்பட அரச குடும்பத்தினர் பலரை படுகொலை செய்தார். பின்னர் துப்பாக்கியை தன்பக்கம் திருப்பி தன்னைத் தானே தாக்கிக்கொண்டார்.
Remembering June 1, 2001: The day we learned King is mortal after all - the Royal Massacre that killed King, Queen & Crown Prince among others of Nepal. This is a photo that I took near Army Hospital where I stood in disbelief witnessing one after another dead body. #Jestha19pic.twitter.com/fEXcCjKpXB
— Ujjwal Acharya (@UjjwalAcharya) June 1, 2020
கோமாவுக்கு சென்றார் திபேந்திரா. உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் பிழைத்திருந்த போது, மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மூன்றே நாள்களில் ஜூன் 4, 2001-ல் மரணமடைந்தார்.
திபேந்திரா மரணத்தால் அவரது உறவினரான ஞானேந்திர ஷா மன்னரானார். அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்காக 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் ஞானேந்திரா. ஆனால் அதன் பின்விளைவுகளின் தீவிரம் அவர் எதிர்பாராததாக இருந்தது.
2006ம் ஆண்டு மக்கள் எழுச்சி ஏற்பட்டு, முற்றிலுமாக அதிகாரத்தை இழந்தார். 2008-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அரசியலமைப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நேபாளம் ஒரு கூட்டாட்சி ஜனநாயக குடியரசு நாடாக உருவானது.
மக்களாட்சி மீது விமர்சனம் ஏன்?
ஜனநாயகம் நேபாளத்தின் அரசியல் கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டுவரவில்லை. நேபாளத்தில் 81% இந்துக்கள் உள்ளனர். 2008ம் ஆண்டுவரை இந்து ராஜ்ஜியமாகவே இருந்துவந்தது. இந்தியாவுக்கு இணையான சாதிய சமூக அமைப்பைக் கொண்டுள்ளது.
மன்னராட்சியைத் துறந்த 17 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறியுள்ளன.
ராணா வம்ச ஆட்சியிலும் சரி ஷா வம்ச ஆட்சியிலும் சரி, பஹுன் பிரிவினரும் (பிராமணர்கள்) சேத்ரி (சத்ரியர்கள்) பிரிவினருமே அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தலித்துகள் அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாகவே உள்ளனர். (இது மாவோயிஸ்டுகளின் புரட்சி வலுக்க உதவியது.)
காத்மண்டுவில் வசிக்கும் உயர்சாதியினரை மையப்படுத்தி நடந்த அரசுக்கு எதிராக பிற இனக்குழுவினர் குரலெழுப்பினர். பல ஆர்பாட்டங்களுக்குப் பிறகு 2015ம் ஆண்டில் கூட்டாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. எனினும் மாதேசிகள் உள்ளிட்ட இனக்குழுவினர் மாகணங்கள் பிரிப்பு தங்களுக்கு சாதகமற்றதாக உள்ளதாக கூறுவருகிறது.
நேபாளத்தின் விளிம்புநிலை மக்கள் குழுக்கள் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்ற மாவோயிஸ்டுகளின் சத்தியத்தை நம்பி அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தபோதிலும் உயர்சாதியினரே அரசியலைக் கைக்குள் வைத்திருக்கும் நிலை நீடிக்கிறது.
தற்போது ஆட்சியில் இருக்கும் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் மற்ற கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை எழுந்துள்ளது.
மன்னரின் விருப்பம்
ஷா வம்சத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா, மீண்டும் ஆட்சிக்கு வருவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. நேபாளத்தின் பொருளாதார சூழல் மோசமடைவது மற்றும் இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து கவலை தெரிவித்து வந்தார்.
ஆனால் எப்போதும் மக்களுடன் தொடர்பிலேயே இருந்துள்ளார். புனித யாத்திரைகளின்போதும் பிற தினங்களிலும் மக்களை சந்தித்து வந்துள்ளார். களத்தில் தனக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய இந்தியாவிற்கும் பயணம் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நேபாள ஜனநாயக தினத்தில், நாட்டின் முன்னேற்றத்துக்கும் அமைதிக்கும் நல்லிணக்க உணர்வு வளரவும் மக்களின் பங்களிப்பு தேவை என வழக்கமான செய்தியை வெளிட்டார்.

அத்துடன், தான் எல்லாம் நல்லபடியாக நடக்குமென நம்பி அரண்மனையில் இருந்து வெளியேறியது சரியாக பலனளிக்கவில்லை என்றும், நேபாளம் போன்ற பாரம்பரியம் கொண்ட நாட்டுக்கு வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக முடியாட்சி தேவை என்றும் பேசினார்.
சுற்றுலா நகரமான போகாராவில் அவரது பேச்சுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. அவர் மீண்டும் காத்மண்டு வந்தபோது விமான நிலையத்தில் மக்கள் திரண்டு, ஓ ராஜா... திரும்பி வந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் என கோஷமிட்டனர்.
அதன் பிறகு முடியாட்சியை மீட்டெடுப்பதற்கான ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் முதல் நடவடிக்கைதான் வெள்ளி அன்று காத்மண்டு தெருக்களில் நிகழ்ந்த கலவரம்.
மன்னராட்சிக்காக கலவரம் நடத்திய முன்னாள் மாவோயிஸ்ட்!
இந்த கலவரத்தின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர் முன்னாள் மாவோயிஸ்ட், இன்றைய தீவிர வலதுசாரி துர்கா ப்ரசாய்.
கலவரத்தின்போது இவர் காவல்துறை தடைகளைத் தாண்டி, நாடாளுமன்றத்தை நோக்கி காரில் சென்றுள்ளார். கலவரத்திற்கு பிறகு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டபோதும் இவர் தப்பியுள்ளார். இப்போதுவரை தலைமறைவாக இருக்கிறார்.

மருத்துவ தொழில்முனைவோரான இதே ப்ரசாய், 2017-ம் ஆண்டு முன்னாள் பிரதமர்களான புஷ்ப கமல் தஹால் பிரசண்டா மற்றும் கே.பி. சர்மா ஒலி (இன்றைய பிரதமர்) ஆகியோரை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த புகைப்படம் வைரலானது.
இதே ப்ரசாய், நேபாள கம்யூனிச கட்சி (மாவோயிஸ்ட்), நேபாள கம்யூனிச கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிச கட்சி, நேபாள சோசியலிச கட்சி ஆகிய இடது சாரி கட்சிகளை முடியாட்சி, வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் துர்கா ப்ரசாயின் பேச்சுகள் வைரலாகி வருகிறது. நேபாளம் முழுவதும் அறியப்பட்டவராக அரசியல் செல்வாக்கு உடையவராக திகழ்கிறார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் நேபாள காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். பின்னர் மாவோயிஸ் கட்சியில் இணைந்து உள்நாட்டுப்போரில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியுள்ளார்.
போருக்குப் பிறகு பிரசந்தாவின் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கே.பி.சர்மா ஒலியின் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-க்கு வந்துள்ளார்.
CPN-UML கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செல்வாக்குடன் இருந்தாலும், அவரது B&C மருத்துவக் கல்லூரியை காத்மண்டு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு கே.பி சர்மா ஒலி எதிராக இருந்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
2022ம் ஆண்டு ப்ரசாய் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாவோயிஸ் போராளி என்பதிலிருந்து சர்ச்சைக்குரிய தொழிலதிபராக மாறிய ப்ரசாய், குடியரசு எதிர்ப்பு சக்திகளுடன் கை கோர்த்து ஜனநாயக அமைப்பு நேபாளை சிதைத்துவிட்டதாகப் பேசிவருகிறார்.

2023ம் ஆண்டில் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா உடன் இணைந்தார். நேபாளத்தை இந்து நாடாகவும் முடியாட்சி நாடாகவும் மாற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது போராட்ட குணம் கொப்பளிக்கும் சொற்பொழிவு, வெகுஜனப் பேரணிகள் மற்றும் சமூக ஊடக ஆதிக்கம் அவரை மன்னராட்சி முகாமின் முக்கிய முகமாக மாற்றியது.
மதவாதத்தை தூண்டும் வகையிலும் முடியாட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையிலும் செயல்பட்டு வந்தவரை முன்னதாக ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்தது ஒலியின் அரசு.
அவருக்கு துணையாக கமல் தாபா தலைமையிலான வலதுசாரி, பழமைவாதக் கட்சியான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி நேபாளம் (RPPN), முடியாட்சிக்கு ஆதர்வால செயலாற்றி வருகிறது.
இப்போது காவல்துறையால் தேடப்பட்டு வரும் துர்கா பிரசாய் நேபாளத்தின் வரலாற்றை புரட்டிப்போடுவாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஊழலும் மக்களின் ஆதங்கமும்
நேபாளத்தில் மக்களாட்சி தொடங்கியது முதல் பதவியில் இருந்த அனைத்து பிரதமர்கள் மீதும், சீனியர் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது.
2006 முதலே அமைச்சரவையில் "கொள்கை முடிவு" எடுக்கப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
தற்போதைய பிரதமர் ஒலி, தேயிலை தோட்டங்களை வணிக இடங்களாக மாற்றுவதற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர்கள், மாதவ் நேபாளம் (2009-11), பாபுராம் பட்டராய் (2011-13), மற்றும் கில் ராஜ் ரெக்மி (2013-14) மூவர் மீதும் அரசு நிலங்களை தனியாருக்கு கொடுத்ததாக புகார் உள்ளது.
மூன்று முறை பிரதமராக இருந்த பிரசண்டா மாவோயிஸ்ட் கொரில்லா போராளிகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை வைத்து பல கோடிகள் சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஐந்து முறை பிரதமராக இருந்த ஷேர் பகதூர் தியூபா விமானங்களை வாங்குவதில் சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஷேர் பகதூர் தியூபாவின் மனைவி அர்சு ராணா தியூபா நேபாள குடிமக்களை காகிதத்தில் பூட்டானிய குடிமக்களாக மாற்றி, அவர்களை அமெரிக்காவிற்கு "அகதிகள்" என்று அனுப்பி வைத்து மோசடி செய்வதில் பங்கு உடையவர் என்ற குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
ஒருவேளை தீவிர வலதுசாரி சக்திகளின் திட்டங்கள் வெற்றி பெற்று மீண்டும் மன்னராட்சி உருவானால், இந்த ஊழல்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படலாம். ஆனால் நேபாள மக்கள் அவர்களின் அரசியல் உரிமையை இழந்து, அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் அபாயமும் உள்ளது!
காலசக்கரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நேபாள அரசியல் சூழல் கவலையளிப்பதாக இருந்தாலும், இதுவரை உலக நாடுகள் மௌனமாகவே உள்ளன.