``வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடை திறப்பு” - ஏமாற்றிய அதிகாரிகள்; கொந்தளிக்கும் மக்கள்!
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைதொடர்ந்து, அவில்தார் சத்திர குடியிருப்பு பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியினர் என்னவென்று விசாரிக்கையில் வீடு கட்டுவதாக கூறியுள்ளனர். வீடு போன்ற அமைப்பில் கட்டப்பட்டதால் பொதுமக்களும் நம்பி விட்டனர்.

இந்த நிலையில், கட்டிட பணிகள் முடிந்த பிறகும் யாரும் குடிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கேட்டதற்கு குடோன் திறக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதையும் மக்கள் நம்பினர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு தனி தனியாக உள்ள அந்த இரண்டு கட்டிடங்களிலும் மதுப்பாட்டில்களை இறக்கி அடுக்கியுள்ளனர் பணியாளர்கள்.
இதையடுத்து கடந்த 1-ம் தேதி 12 மணிக்கு முன்பாக டாஸ்மாக் போர்ட்டை வைத்தனர். பின்னர் கடையை திறந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கொந்தளிப்படைந்தனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், "கட்டும் போதே டாஸ்மாக் கடைதான் என தெரிந்தால் எதிர்ப்பு கிளம்பி அதை நிறுத்தி விடுவோம் என்பதற்காக வீடு கட்டுவதாகவே சொல்லி வந்தனர். அதை நாங்களும் நம்பினோம்.
இந்தநிலையில் ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறந்தனர். அதிர்ச்சியடைந்த நாங்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தோம்.
இதையறிந்த போலீஸ், எங்களிடம் சமதானம் செய்தனர். அதை ஏற்காமல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போராட்டம் அறிவித்தோம். இதையடுத்து இரண்டு டாஸ்மாக் கடைகள் முன்பு ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பூட்டு போடும் போராட்டத்திற்காக குவிந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம், பாபநாசம் தாசில்தார் பழனிவேல், டி.எஸ்.பி. முருகவேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, குடியிருப்பு பகுதிகளுக்கு பிரச்னை எதுவும் வராமல், டாஸ்மாக் கடைக்கு செல்ல மாற்று பாதை அமைக்கப்படும் என்றனர்.
டாஸ்மாக் கடை அமைந்துள்ள அரை கிலோமீட்டர் துாரத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கேயில் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளால் நாங்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து நிம்மதி இழக்கப்போகிறோம். எனவே டாஸ்மாக் கடைக்கு செல்ல மாற்று பாதை அமைக்கிறோம் என்பது எங்களுக்கான நிரத்தர தீர்வு கிடையாது.
கடையை அகற்ற வேண்டும் அதுவே தீர்வாக இருக்கும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட இருக்கிறோம். அதன் பிறகும் கடையை அகற்றவில்லை என்றால் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
