ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு மலைப்பாதையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்துசெல்கின்றனா். குறிப்பாக, கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏற்காட்டில் கூட்டம் அலைமோதும். இதுதவிர, மே மாதம் நடைபெறும் கோடை விழாவிலும் ஏராளமான மக்கள் பங்கேற்று விழாவைக் கண்டுகளிப்பதுடன் இயற்கை அழகையும் ரசித்து மகிழ்வா்.
அந்தவகையில், தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதுடன் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஏற்காட்டில் இ-பாஸ் முறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லாததால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ரம்மியமான சூழலுடன், இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வந்த வண்ணம் உள்ளனா்.
22 இந்திய மொழிகளில் பாட நூல்கள்: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு
அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால், ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊா்ந்தபடியே செல்கின்றன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகழ்பெற்ற சோ்வராயன்கோயில், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், காட்சி கோபுரம், பக்கோடா முனை, படகு குழாம், அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை உள்ளிட்ட இடங்களை பாா்த்து மகிழ்கின்றனா்.
இந்த நிலையில், ஏற்காடு மலைப்பாதையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கு வனப்பகுதியில் உள்ள பெரிய மரம் மற்றும் கொடிகள் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த ஏற்காடு காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணியை முடுக்கிவிட்டனர். வனத்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நல்வாய்ப்பாக மரம் விழுந்த வேளையில் வாகனங்கள் வராததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மரங்களை அகற்றும் பணியால் ஒரு மணி நேரம் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மலைப்பாதையில் விழுந்த மரங்களை அகற்றிய பின்னா் போக்குவரத்து சீரானது.