Tollywood: நந்தமுரி, கோனிடெல்லா, அல்லு, அக்கினேனி - டோலிவுட் குடும்பங்களின் கதை |Depth
கோலிவுட், பாலிவுட்டைக் காட்டிலும் டோலிவுட்டில் நடிகர்களின் அடுத்தடுத்த தலைமுறையினரும் சினிமாவில் மும்மரமாக ஈடுபட்டு வெவ்வேறு பங்காற்றி இன்று முன்னணியில் இருக்கிறார்கள். இதற்கென அவர்கள் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்கின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டாக நந்தமுரி குடும்பம், கோனிடெல்லா குடும்பம், அல்லு குடும்பம், அக்கினேனி குடும்பம், டகுபதி குடும்பம் ஆகிய குடும்பங்களைக் குறிப்பிடலாம்.
சினிமாவைத் தாண்டி இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா அரசியலிலும் களமிறங்கி வந்திருக்கிறார்கள்.

தற்போது வரை டோலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் நடிகர்களின் படங்களாகவே இருக்கிறது.
இந்தக் குடும்பத்திலிருந்து வந்த பலரும் கிடைத்த வாய்ப்பை இறுக்கமாகப் பிடித்து முன்னேறியிருக்கிறார்கள்.
அதுபோலவே, இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், சரியான வாய்ப்பும், தருணங்களும் அமையாமல் ஒரிரு படங்களோடு லைம் லைட்டிலிருந்து காணாமலும் போயிருக்கிறார்கள்.
டோலிவுட்டின் இந்தப் பிரபல குடும்பங்களின் பின் கதைகளை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
என்.டி.ஆர் என்றழைக்கப்படும் என்.டி.ராம ராவ் தெலுங்கு சினிமாவிலும், ஆந்திர அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
தேசிய கட்சிகள் ஆந்திரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல்களில் அப்போது தொடர் வெற்றியைப் பெற்று வந்தது. முதலமைச்சர்களின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்களே நீடித்து வந்தது.
இதனை என்.டி.ஆர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி மாற்றி எழுதியது.

முதல் முறையாக மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர். அதவாது என்.டி.ஆர் 1983-ல் முதல்வரானார். அரசியலுக்குள் வருவதற்கு முன்பு டோலிவுட்டில் பம்பரமாய்ச் சுற்றி பல ஹிட் படங்களை கொடுத்து டோலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்திருக்கிறார்.
சினிமா எப்போதுமே மக்களிடம் அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். திரையில் பார்க்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களைப் பார்த்து அவர்களும் நிதர்சனத்தில் அப்படியான குணம் கொண்டவர்கள் என மக்கள் நினைப்பார்கள்.
அப்படி தெய்வ வேடங்களில் அதிகமாக நடித்து மக்களிடையே பெரும் அன்பை பெற்ற பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்தார் என்.டி.ஆர். அவருக்கு மொத்தம் 8 மகன்கள், 4 மகள்கள்.
இதில் முதல் மகனான நந்தமுரி ராமகிருஷ்ணா அவருடைய இளமை காலத்திலேயே இறந்துவிட்டார். சினிமா பக்கமும் அரசியல் பக்கமும் என்.டி.ஆரின் மூத்த மகனான ராமகிருஷ்ணா ஈடுபடவில்லை.
ராமகிருஷ்ணாவின் நினைவாக ராமகிருஷ்ணா ஸ்டுடியோஸ் என்ற ஸ்டுடியோவை நிறுவினார். இரண்டாவது மகனான நந்தமுரி ஜெயகிருஷ்ணா தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.

இவரும் கடந்த 2014-ம் ஆண்டு இயற்கை எய்தினார். தற்போது இவருடைய மகன் நந்தமுரி சைதன்யா கிருஷ்ணன் தனது தந்தைக்குப் பிறகு அந்தத் தயாரிப்பு நிறுவனத்தை எடுத்து நடத்தி வருகிறார்.
மூன்றாவது மகனான நந்தமுரி சாய்கிருஷ்ணா திரையரங்க உரிமையாளராக இருந்திருக்கிறார். இவரும் கடந்த 2004-ம் ஆண்டு உயிரிழந்தார்.
நான்காவது மகனான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சினிமாவிலும் அரசியலிலும் ரவுண்டு அடித்திருக்கிறார். தன் தந்தையுடன் குழந்தை நட்சத்திரங்களில் நடித்து வந்தவர் பிறகு குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
அரசியலிலும் ஈடுபட்ட அவர் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் ஹரிகிருஷ்ணா உயிரிழந்தார்.
இவருடைய மூத்த மகன்தான் நம்முடைய அதிரடி ஆக்ஷன் நாயகனான ஜூனியர் என்.டி.ஆர். ஹரி கிருஷ்ணாவின் மற்றொரு மகனான நந்தமுரி கல்யாண் ராமும் டோலிவுட்டில் நடிகராக இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். ஐந்தாவது மகனான நந்தமுரி மோகனகிருஷ்ணா ஒளிப்பதிவாளராக இருந்தவர்.
என்.டி.ஆரின் சில திரைப்படங்களுக்கே ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றியிருக்கிறார்.
இவருடைய ஆறாவது மகனான நந்தமுரி பாலகிருஷ்ணாதான் நம் அன்பிற்குரிய பாலய்யா! அரசியல், சினிமா என இரண்டு பக்கமும் சுற்றி வெற்றிகளைக் கண்டிருக்கிறார்.
டோலிவுட்டின் உச்ச நடிகராக இருக்கும் பாலய்யா தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். பாலய்யாவின் மகனும் கூடிய விரைவில் நடிகராக டோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். ஏழாவது மகனான நந்தமுரி ராமகிருஷ்ணா (ஜூனியர்) திரைப்படத் தயாரிப்பாளராக இருக்கிறார்.
சினிமா பக்கம் கவனம் செலுத்திய ராமகிருஷ்ணா (ஜூனியர்) அரசியல் பக்கம் ஈடுபாடு காட்டவில்லை.

இவர்களை தாண்டி டகுபதி புரண்டேஷ்வரி, நந்தமுரி புவனேஷ்வரி, கரபதி லோகேஷ்வரி, நந்தமுரி உமா மகேஷ்வரி என நான்கு மகள்களும் இருக்கிறார்கள்.
இதில் டகுபதி புரண்டேஷ்வரிதான் ஆந்திராவின் பா.ஜ.க மாநில தலைவர். தற்போது ராஜமுந்திரி தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். நந்தமுரி புவனேஷ்வரியின் கணவர்தான் தற்போதைய ஆந்திரா மாநிலத்தின் முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு. கரபதி லோகேஷ்வரி சினிமா, அரசியல் என எந்தப் பக்கமும் பெரிதளவில் தலைகாட்டாதவர்!
இறுதியாக, என்.டி.ஆரின் இளைய மகளான நந்தமுரி உமா மகேஷ்வரி கடந்த 2022-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதான் என்.டி.ஆர் குடும்பத்தின் விவரம். என்.டி.ஆரின் கட்டிப்பாட்டில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு சந்திரபாபு நாயுடுவின் கைகளுக்கு வந்ததெல்லாம் தனி அரசியல் கதை
அல்லு ராமலிங்கையாதான் இந்த குடும்பத்தின் முதல் அடையாளம். காமெடி நடிகராகவும், குணசித்தர நடிகராகவும் டோலிவுட்டில் சுற்றியிருக்கிறார்.
கிட்டதட்ட 1000 திரைப்படங்களுக்கு மேல் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் என்ற பெருமையைக் கொண்டவர் அல்லு ராமலிங்கையா!
இவருடைய அபரிமிதமான இந்த பங்களிப்பைப் பாராட்டி இவருக்கு பத்ம ஶ்ரீ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

இவருடைய மகனான அல்லு அரவிந்த் இப்போதும் டோலிவுட்டின் டாப் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
1975 முதல் திரைப்படங்களை தயாரித்து வரும் அல்லு அரவிந்தின் `கீதா ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் இப்போது வரை தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான `தண்டேல்' திரைப்படத்தை தயாரித்திருந்ததும் இந்த `கீதா ஆர்ட்ஸ்' நிறுவனம்தான்! தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்களே அந்த வாக்கியத்தை உறுதியாக்கும் வகையில் அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜூன் இன்று டோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார்!
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான `புஷ்பா 2' திரைப்படமும் ஆயிரக் கணக்கில் வசூலை அள்ளியது பலருக்கும் நினைவிருக்கலாம்!
இவருடைய சகோதரர் அல்லு சிரிஷும் டோலிவுட்டில் நடிகராக இருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்தாண்டு `பட்டி' திரைப்படம் வெளியாகியிருந்தது. அல்லு அரவிந்தின் மூத்த மகனான அல்லு வெங்கடேஷ் தயாரிப்பாளராக இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, தொழில்முனைவோராகவும் இயங்கி வருகிறார். அல்லு ராமலிங்கையாவின் மகளும், அல்லு அரவிந்த்தின் சகோதரியுமான சுரேகாவைதான் நடிகர் சிரஞ்சீவி திருமணம் செய்துகொண்டார்.
இப்படிதான் அல்லு குடும்பமும் கோனிடெல்லா குடும்பமும் உறவினர்களானார்கள்!
சிரஞ்சீவி கோனிடெல்லா, கோனிடெல்லா நாகேந்திர பாபு, கோனிடெல்லா கல்யாண் குமார் என்கிற பவன் கல்யாண் ஆகியோர்தான் இந்த கோனிடெல்லா குடும்பத்தின் முதல் தலைமுறையினர்.
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி சினிமாவைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார். சினிமாவிலிருந்து விலகிய அவர் கடந்த 2008-ம் ஆண்டு ப்ரஜன் ராஜ்யம் கட்சியைத் தொடங்கினார்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது இந்தக் கட்சி.

இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். அதன் பிறகும் அரசியலில் கவனம் செலுத்திய அவர் மீண்டும் 2016-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தார்.
அரசியலில் கவனம் செலுத்திய இந்த இடைபட்ட காலத்தில் கேமியோ கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவருடைய இரண்டாவது சகோதரரான கோனிடெல்லா நாகேந்திர பாபு குணசித்தர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் இப்போது வரை நடித்து வருகிறார்.
சினிமாவைத் தாண்டி தன் சகோதரர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியிலும் இருக்கிறார்.
சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண் சினிமாவிலும் அரசியலிலும் கொடி கட்டி பறப்பவர்! பவன் கல்யாண்தான் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர்.
சினிமாவிலிருந்து விலகுவதாக பவன் கல்யாண் சில முறைகள் சொல்லியிருந்தாலும் அவருடைய `ஹரி ஹர வீர மல்லு' , `ஓ.ஜி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவிருக்கின்றன.
சிரஞ்சீவின் மகனான ராம் சரணும் டோலிவுட்டின் நடிகர்களின் பட்டியலில் டாப் இடத்தில் இருக்கிறார்.

சிரஞ்சீவின் மூத்த மகளான சுஷ்மிதா கோனிடெல்லா டோலிவுட்டில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். அவருடைய தந்தை மற்றும் சகோதரரின் திரைப்படங்களுக்கும் இவர் ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார்.
இரண்டாவது மகளான ஶ்ரீஜா கோனிடெல்லா சினிமா, அரசியல் எனப் பப்ளிக் இமேஜில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு மகன்தான் டோலிவுட் நடிகர் வருண் தேஜ்.
நாகேந்திரா பாபு மகள் நிகாரிகா கோனிடெல்லாவும் நடிகையாக வலம் வருகிறார்.
அக்கினேனி நாகேஸ்வர் ராவ் டோலிவுட்டில் ஏழு தசாப்தங்களாக நடிகராக வலம் வந்தவர். நடிகர் என்றால் உயரமாகவும், கட்டுமஸ்தான உடல் வேண்டும் என பேசப்பட்ட ஸ்டிரியோடைப்களை உடைத்ததில் நாகேஷ்வர் ராவ் முக்கியமானவர்.
சரோஜா அக்கினேனி, சத்யாவதி அக்கினேனி, நாக சுசிலா அக்கினேனி என்ற மூன்று மகள்களும், நாகர்ஜுனா அக்கினேனி, அக்கினேனி வெங்கட் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
நாகேஸ்வர் ராவின் மகள்கள் அனைவரும் சினிமா, அரசியல் என எந்தப் பக்கமும் கவனம் செலுத்தியது கிடையாது.

இரண்டாவது மகளான சத்யவதி அக்கினேனியின் மகன் மட்டும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாகர்ஜூனா 1970 முதல் டோலிவுட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
இவருக்கும் இவருடைய முதல் மனைவியான லக்ஷ்மி டகுபதிக்கும் (நடிகர் டகுபதி ராமநாயுடுவின் மகள்) பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா.
லக்ஷ்மியிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பிறகு நடிகை அமலாவைத் திருமணம் செய்துகொண்டார் நாகர்ஜூனா. இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் நடிகர் அகில் அக்கினேனி.
நாகேஸ்வர் ராவின் மற்றொரு மகன் அக்கினேனி வெங்கட் தயாரிப்பாளராக இருந்தவர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
டகுபதி ராமநாயுடு `சுரேஷ் புரோடக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 150-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து கின்னஸ் சாதனையெல்லாம் படைத்திருக்கிறார்.
இவருக்கு சுரேஷ் பாபு, டகுபதி வெங்கடேஷ் என இரண்டு மகன்களும், லக்ஷ்மி டக்குபதி என மகளும் இருக்கிறார்.
இந்த லக்ஷ்மிதான் நடிகர் நாகர்ஜூனாவின் முதல் மனைவி.

சுரேஷ் பாபுதான் தற்போது `சுரேஷ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
இவருடைய மகன்தான் நடிகர் ரானா டகுபதி.
ராமநாயுடுவின் இளைய மகனான டகுபதி வெங்கடேஷ், `விக்டரி' வெங்கடேஷாக இப்போதும் டோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வருகிறார்.
350 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாதான் இந்த குடும்பத்தின் மூத்தவர்.
இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகன் ரமேஷ் பாபு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் டோலிவுட்டை ரவுண்டு அடித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு இவர் இயற்கை எய்தினார். இவருடைய இளைய மகன்தான் நமக்கு மிகவும் ஃபேவரைட்டான நடிகர் மகேஷ் பாபு.

இவருடைய மூத்த மகள் மஞ்சுளா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவருடைய இரண்டாவது மகள் பத்மாவதியின் கணவர்தான் குண்டூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர்.
இளைய மகள் ப்ரியதர்ஷினி பப்ளிக் இமேஜ்ஜில் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. இவருடைய கணவர்தான் நடிகர் சுதீர் பாபு.
டோலிவுட்டின் சீனியர் நட்சத்திரங்களில் ஒருவரான மோகன் பாபுதான் இந்த குடும்பத்தின் சீனியர். இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
மோகன் பாபுவின் மூத்த மகள் லக்ஷ்மி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

மூத்த மகன் விஷ்ணு மஞ்சு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் டோலிவுட்டில் இயங்கி வருகிறார்.
இளைய மகன் மஞ்சு மனோஜ்ஜும் நடிகராக இருக்கிறார்.
இவருக்கும் மோகன் பாபுவுக்கு இடையே சமீபத்தில் மோதல் வெடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.