Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
Doctor Vikatan: என் வயது 38. எனக்கு 20 ப்ளஸ் வயதிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்து தலைக்கு ஹென்னாதான் உபயோகிக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் தோழி சொன்னதன் பேரில், முதல் நாள் ஹென்னாவும், அடுத்த நாள் அவுரி இலை பொடியும் உபயோகிக்கிறேன். கடந்த ஒரு வருடமாக என் சருமத்தில் கருமை படர ஆரம்பித்திருக்கிறது. கெமிக்கல் டை உபயோகித்தால் சருமம் கறுப்பாகும் என்று கேள்விப்பட்டதால் ஹென்னா உபயோகிக்கிறேன். அதுவும் சருமத்தைக் கறுப்பாக மாற்றுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

கெமிக்கல் கலந்த ஹேர் டை ஆபத்தானது என்ற எண்ணத்திலும், ஹென்னா இயற்கையானது என்பதால் அது பாதுகாப்பானது என்ற எண்ணத்திலும் பலரும் அதை உபயோகிக்கிறார்கள். ஹென்னாவுடன் சேர்த்து அவுரியையும் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பொருள்கள் எல்லாம் பாதுகாப்பானவை, பக்க விளைவுகள் அற்றவை என அர்த்தமில்லை.
அவுரி என்பது சிறந்த மூலிகைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அது கருநீல நிறத்தைக் கொடுக்கக்கூடியது. ஹென்னா எனப்படும் மருதாணியை கூந்தலில் தடவும்போது, அது முடிக்கு ஆரஞ்சு நிறத்தைக் கொடுக்கிறது. அதற்கு மேல் அவுரியைப் பூசும்போது, அதன் கருநீல நிறம் சேர்ந்து கூந்தலுக்கு கருமை நிறம் கிடைக்கிறது. அவுரி இயற்கையான மூலிகைதானே என்ற எண்ணத்தில் இப்போது பலரும் இப்படித்தான் ஹென்னா- அவுரி காம்பினேஷனை உபயோகிக்கிறார்கள். ஆனால், அவுரியின் அடர் நிறமானது சிலருக்கு சருமத்தில் இறங்கவும் வாய்ப்பு உண்டு. இப்படி தலை வழியே சருமத்தில் இறங்கும் நிறமானது, சருமத்தைக் கறுப்பாக்கிவிடுகிறது. அது சரியாக பல நாள்கள் ஆகின்றன.

எனவே, அவுரியை தவிர்ப்பது அல்லது குறைவான அளவு உபயோகிப்பதுதான் சரியாக இருக்கும். ஏற்கெனவே அவுரி உபயோகித்ததால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்க பால் தடவி வரலாம். மசாஜ் கிரீம் உபயோகித்து மசாஜ் செய்து வரலாம். முல்தானி மிட்டியுடன் சிறிது பன்னீரும், கிளிசரினும் கலந்து கருமை படர்ந்த இடத்தில் பேக் போல போடலாம். இதையெல்லாம் வாரத்தில் இருமுறை செய்தால் போதும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம். எஸ்.பி.எஃப் 30 முதல் 50 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகித்து வந்தால், அவுரியினால் ஏற்பட்ட கருமை மெள்ள மெள்ள மறையும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.