Chennai Rain: வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் இன்று திடீர் மழை!
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று காலையில் மிதமான மழை பெய்தது. நீலகிரி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், '' குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அது போலவே, லட்சதீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 5-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஏப். 4) மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.'' எனக் கூறியிருந்தது.

ஆனால், இன்று காலை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று காலை 5.30 மணி முதல் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.