செய்திகள் :

Rain Alert: சென்னையில் பரவலாக மழை; 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

post image

இந்தியப் பெருங்கடலில் நிலவும் தற்போதைய வளிமண்டல நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று 12 - 20 செ.மீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம்

வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம், ``வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று மற்றும் நாளை அதிகாலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது." என்றார்.