'அமைச்சகத்தின் நம்பர் ஒன்!' ரூ.226 கோடி ஈட்டிய வானிலை ஆய்வு மையம்!' - எப்படி?
2022-23 நிதியாண்டில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் 226 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம், அந்த அமைச்சகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தரும் ஒரு பிரிவாக மாறியுள்ளது.
பொதுவாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த தரவுகள், எச்சரிக்கைகளை வழங்கும். இந்த தரவுகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகள் பெரிதாக பயன்பெறுவார்கள்.
அது எப்படி?
'இன்று மழை பெய்யப் போகிறதா', 'வெயில் எப்படி இருக்கும்?' போன்றவற்றை தெரிந்துகொள்வதன் மூலம் மக்களும், நிறுவனங்களும் அதற்கேற்ப தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்வார்கள்.
அப்போது தேவையில்லாத பணம் மற்றும் நேரத்தை செலவு செய்வதை தடுத்துவிடலாம்.
வருமானம் ஈட்டியது எப்படி?
ஆக, இந்தத் தகவல்களை வைத்து தான் இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் ரூ.226 கோடியை ஈட்டியுள்ளது.
அதாவது இந்தத் தரவுகளை சில நிறுவனங்களுக்கு வானிலை ஆய்வு மையம் விற்கும். வானிலையை ஆய்வு செய்யும் கருவிகளையில் பிற நாட்டிற்கு மற்றும் சில நிறுவனங்களுக்கு விற்கிறது வானிலை ஆய்வு மையம்.
இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வானிலை குறித்த தரவுகளை விற்றதன் மூலம் இந்திய வானிலை மையம் கணிசமான தொகையை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, இந்திய வானிலை மையம் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு விற்ற தரவுகள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.66 கோடி ஈட்டியுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் தான் உருவாக்கிய 42 தொழில்நுட்பங்களை விற்று ரூ.24 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது.
இந்தத் தரவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது ஆகும்.