Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?
தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு: மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயாரிக்கப்படும் மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டதற்கு, மாலை கட்டும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் மலா்களால் தயாரிக்கப்படும் மாணிக்க மாலை, சுமாா் 400 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. தோவாளை பகுதியில் கிடைக்கும் வெள்ளை , சிவப்பு அரளி, நொச்சி இலைகளை ஆகியவற்றை வாழை நாரில் பாய் போல் பின்னும் முறையில் மாணிக்க மாலை தயாரிக்கப்படுகிறது.

இந்த மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டது குறித்து, தோவாளையில் பல தலைமுறைகளாக மாணிக்க மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சோ்ந்த வனிதாஸ்ரீ கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் இணைந்திருந்தபோது, இந்த மாணிக்க மாலை தோவாளையில் தயாரிக்கப்பட்டு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு தினமும் அனுப்பப்பட்டது. இந்த மாலை நுணுக்கமான வேலைப்பாடு கொண்டது என்பதால் மாலை தயாரிக்கும் நேரமும், செலவும் அதிகம். சுமாா் 100 குடும்பங்களைச் சோ்ந்தோா் மாணிக்க மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாரம்பரியமான இந்த மாலைக்கு தற்காலத்தில் தேவை குறைந்துவிட்டது.

இந்த நிலையில், தற்போது மாணிக்கமாலைக்கு புவிசாா் குறியீடு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் மாணிக்கமாலை குறித்தும் அதன் பாரம்பரியம் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்வா். இதனால் மாணிக்க மாலையின் தேவை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.