செய்திகள் :

கிறிஸ்துமஸ் இரவுகள் – பாகம் 1 | #Trichy | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கதையின் ஆரம்ப புள்ளி

1960-கள் காலகட்டம் அது.. அந்த கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் ஏழூர் என்று அழைக்கப்பட்ட ஏழு கிராமங்களில் முக்கிய கிராமமாக இருந்தது. கிராமத்தின் மத்தியில் கட்டப்பட்டிருந்த மாதா கோவில் காரணமாக, அந்த கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் கிறிஸ்துவ குடும்பங்களே அதிகம் இருந்தன.

அந்த கிறிஸ்துவ குடும்பங்கள் அக்கிராமத்தில் வந்து குடியேறியதைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்பட்டு வந்தன.

முதலாவது கதை. திருச்சியில் காவிரி கரை ஓரத்தில் அந்த ஃப்ரெஞ்சுப் படைகள் முகாமிட்டிருந்தன. ஃப்ரெஞ்சுப் படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது.

அவ்வாறு நடைபெற்ற போர்களால் பாதிக்கப்பட்ட சாதாரண குடிமக்கள் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்க காவிரி கரை தவிர்த்து வைகை கரையோரம் இருந்த ஏழூர்களில் குடியேறினார்கள். அந்த ஏழூர்களின் தலையாய கிராமமாக இடைக்காட்டூர் இருந்தது.

திருச்சி

இரண்டாவதாக அறியப்பட்ட கதை.  ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட அமெரிக்கர்கள் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவே நாட்டில் இருந்து சில குடும்பங்களை அன்றைய ராமநாதபுரத்தில் இருந்த இடைக்காட்டூர் கிராமத்தில் குடியேற்றினர். அந்த கிறிஸ்துவ குடும்பங்களில் - இந்தியா சுதந்திரம் பெற்றதும் - சில குடும்பங்கள் அருகில்  இருந்த மதுரைக்கு குடி பெயர்ந்தன. வேறு சில குடும்பங்கள் திருச்சி என அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளிக்கு குடிபெயர்ந்தன.

திருச்சிக்கு குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன் உங்களுக்கு சொல்லப்போவதே இந்த கிறிஸ்துமஸ் இரவுகள்.

ஒரு காலனியின் கதை

திருச்சியில் உள்ள பழமையானதும் மிகவும் பெயர் பெற்ற கல்லூரிகளில் ஒன்றுமான செயின்ட் ஜோசப் கல்லூரி தன்னிடத்தே வேலை பார்த்த பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பாடம் கற்பிக்காத வேலையாள்களுக்கு கல்லூரியின் அருகில் ஏற்படுத்திக் கொடுத்த ரோட்ஜர்ஸ் கிரௌண்ட் என்ற பிரிட்டோ காலனியில் வளர்ந்த ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் பார்க்கப் பட்ட காலத்தின் ஓட்டமே இந்த காலனியின் கதை. 

அந்த காலனியில்… 

கிறிஸ்துமசை வரவேற்க கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முந்தைய மாதமான நவம்பர் கடைசியில் இருந்தே காலனியில் இருந்த கிறிஸ்துவர்கள் அனைவரும் தயார் ஆகிவிடுவோம்.

நான் சிறுவனாய் இருந்த பொழுது கிறிஸ்துமஸ் நேரங்களில் ஆஃப் சீசன் விற்பனை போல் திருச்சி தெப்பக்குளத்தின் எதிரில் இருந்த சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் வெடிகள் விற்பனைக்கு கிடைக்கும். போகப்போக காற்று மாசு படுவது உணரப்பட்டு வெடிகளின் விற்பனை குறைந்ததால் தீபாவளி சமயங்களில் மட்டும் தான் வெடிக்கடைகள் போடப்பட்டன.

திருச்சி தெப்பக்குளம்

எங்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தான் அப்பா வெடி வாங்குவார். தீபாவளி சமயம் வாங்கி வந்த வெடிகளை பதத்துப் போகாத வண்ணம் பரணில், ப்ளாஸ்டிக் கவர் சுற்றி வைத்துவிடுவார்கள். ஆனால் காலனி வீடுகளில் ஒன்றில் இருந்த மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர்கள் வீடுகளில் ஒவ்வொரு வருடமும் மற்றவர்கள் வாங்குவதை விட அதிக அளவில் வெடி வாங்குவார்கள்.

நாங்கள் எங்கள் கோட்டாவை வெடித்து விட்டு ஐஸ்கிரீம் கடைக்காரர்கள் வெடிக்கும் ராக்கெட்டையும் யானை வெடியையும் அணுகுண்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதான வெடிரகங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும்.

நாங்கள் ராக்கெட் விடும் பொழுது ஒரு பாட்டிலில் ராக்கெட்டை நிற்க வைத்து விடுவோம். அவ்வாறு வைத்தால் ராக்கெட் நேரே வானில் சென்று பூப்பூவாய் மலர்ந்து கொட்டும்.

பாட்டிலில் வைத்து ராக்கெட் விட்டபிறகு அந்த பாட்டிலை எடுத்து மோந்து பார்த்தால் ஒரு மாதிரியான வாடை வரும். 

வேறு சில நேரங்களில் கொட்டாங்குச்சிக்குள் யானை வெடி வைத்து கொட்டாங்குச்சி தூக்கி எறியப்பட்டு சிதறுவதை பார்த்து ரசிப்போம். எனக்கு ஞாபகம் வந்து அதிகம் வெடி வெடித்தது அக்கா கல்யாணமாகி தலை கிறிஸ்துமஸ் கொண்டாடிய பொழுது தான். நான் அப்பொழுது மிக சிறுவன். அப்பா, எனக்கு தெரிந்து முதல்  முறை வெடி வெடிக்கும்பொழுது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

அத்தான் எதை செய்தாலும் அதில் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் என் மற்றைய சகோதரர்களுடன் போட்டி போட்டு, விட்ட இரண்டு ராக்கெட்டுகளும் நேராக எங்கள் வீட்டை ஒட்டியிருந்த தபால் அலுவலகத்தில் சென்று விழுந்தன. மூன்றாவது ராக்கெட் ஒரு வாழை மரத்தில் விழுந்து பச்சை மரத்தின் காய்ந்த மட்டைகள் எரியத் தொடங்கின. 

வாழை மரம் எரிவது வீட்டுக்கு நல்லது இல்லையாம். ஆனால் அப்பா அதை பற்றியெல்லாம் கவலைப்படுபவர் இல்லை. அவர் கவலை நெருப்பு பெரிதாகக் கூடாதென்பது தான். நீரை ஊற்றி ஊற்றி அணைக்க வைத்தார்.

மைக்கிள்ஸ்  ஐஸ்கிரீம் கடையின் முதல் தலைமுறை உரிமையாளர்கள் மூன்று சகோதரர்கள்.அந்த  சகோதரர்களில் ஒருவரின் மகனான வின்சென்ட் எனும் ஒரு பையனும்  இன்னொரு சகோதரரின் மகனும் கால்பந்து விளையாட்டு வீரரான ஜெரமும் ராக்கெட்டை கையில் வைத்தே விடுவார்கள்.

என்.எஸ்.பி ரோடில் ஒரு பெரியவர் சிறிதாக கடை ஒன்று வைத்திருப்பார். இந்த கடையில் சீசனுக்கு தகுந்தார் போல் பழவிற்பனை நடக்கும். பழ விற்பனையுடன் வெடியும் மத்தாப்பூவும் இவர் கடையில் வருடம் முழுதும் விற்கப்படும். அவ்வப்போது வின்சென்ட் இந்த கடையில் இருந்து வெடி வாங்கி வெடிப்பான்.

காலனியில் இருந்த பையன்களில் பள்ளி படிப்புக்கு சென்றவர்களில் முக்கால் வாசிப்பேர் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தனர். எங்களுக்கு அடுத்த தலைமுறையில் தான் காலனி பையன்கள் திருச்சியில் இப்பொழுது பிரபலமாகி இருக்கும் காம்பியன் பள்ளிக்கு செல்லத் துவங்கினர்.

அதேபோல் காலனிப் பெண்கள் எல்லோரும் ஹோலி கிராஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தனர்.

காலனியில் இருந்து முதன் முதலில் நர்சரியில் படித்தது என் தங்கை வனஜாவும் இன்னொரு கணக்கு பேராசிரியர் ஒருவரின் மகனும் தான். நேஷனல் உயர்நிலை பள்ளியில் முதன் முயற்சியாக நர்சரி பள்ளி அப்போது தான் ஆரம்பிக்கப் பட்டது. ஜெயா என்ற ஒரு பெண் காலனிக்கு வந்து இருவரையும் பள்ளிக்கு தினசரி அழைத்துச் செல்வார். என் தங்கை நர்சரி பள்ளியில் படிக்க சீருடை அணிந்து செல்வது எனக்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும்.

முப்பத்தோறு வீடுகள் கொண்டிருந்த எங்கள் காலனியை குறுக்கில் ஓடிய ஒரு சாக்கடை தான் இரண்டாக பிரித்தது. 

சாக்கடைக்கு தெற்கே ஓடிய பழைய காலனியில் 22 வீடுகளும் வடக்கே இருந்த புதிய காலனியில் 9 வீடுகளும் இருந்தன. பழைய காலனியில் கல்லூரியில் வேலை பார்த்த பேராசிரியர் குடும்பங்களே இருந்தன.

பிரதான மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடை

புதிய காலனியில் பள்ளி ஆசிரியர்களும், பாடம் கற்பிக்காமல் மற்ற வேலை செய்தவர்களின் குடும்பங்களும் இருந்தன. புதிய காலனியில் இருந்த ஒரே ஒரு பேராசிரியர் எங்கள் தந்தையே. எங்கள் காலனியில் இருந்த ஒரு வீட்டில் மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் கடையின் உரிமையாளர்களில் இரு சகோதரர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.

பள்ளிகளுக்கு ஒரு வருடத்தில் மூன்று பரிட்சைகள் இருக்கும். முதலில் காலாண்டு பரிட்சை. செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் காலாண்டு பரிட்சையை தொடர்ந்து விடுமுறை ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை இருக்கும். பின்னர் டிசம்பர் மாதம் அரைஆண்டு பரிட்சை வரும்.  அரை ஆண்டு பரிட்சை முடிந்த பின் குறைந்தபட்சம் இரண்டு வாரம் விடுமுறை கிடைக்கும்.  வருட இறுதியில் முழு வருடபரிட்சை இருக்கும். முழு வருட பரிட்சை முடிந்து கோடை விடுமுறை குறைந்தது நாற்பத்தைந்து நாள்கள் இருக்கும். 

புனித வளனார் உயர்நிலைப் பள்ளி என்று அறியப்படும் செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் இருந்து பதினோறாம் வகுப்பு வரை இருந்தது. அப்பொழுது புனித வளனார் உயர்நிலைப் பள்ளியில் அரசு அங்கீகாரம் பெற்ற இங்கிலிஷ் மீடியமும் இருந்தது.

இங்கிலிஷ் மீடியத்தில் அனுமதி கிடைப்பது கடினம். உயர்நிலை பள்ளியில் ஆறாம்  வகுப்புக்கு நுழைவு பரிட்சை வைத்தே சேர்க்கை நடைபெறும். நுழைவு பரிட்சை ஆங்கிலத்துக்கும் கணிதத்துக்கும் நடைபெறும்.

புனித வளனார் கல்லூரி/ உயர்நிலைப்பள்ளியை சார்ந்த மாதா கோவில் பங்கை சேர்ந்த பையன்கள் உயர்நிலைப் பள்ளியில் சேரும் முன் பங்குத் தந்தையரிடம் தங்கள் எண்ணை கொடுத்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த முன்னுரிமை தமிழ் வழி வகுப்புகளுக்கே. ஆங்கில மீடிய சேர்க்கை திறமையின் அடிப்படையிலேயே இருக்கும். பள்ளியில் இன்னொரு இடைச்செருகல் சேர்க்கை ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்.

கல்லூரி மாதா கோவிலென இப்பொழுது அழைக்கப்படும் லூர்து மாதா கோவிலைச் சார்ந்து இருந்த பகுதிகள் ரோட்ஜர்ஸ் கிரௌண்ட் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட பிரிட்டோ காலனி, இப்போதைய மாரிஸ் தியேட்டர் அருகில் இருக்கும் ஜோசப் காலனி, அண்ணா சிலை செல்லும் வழியில் இருக்கும் வெனிஸ் நகர், டவுன் ஹால் அருகில் இருக்கும் மேரிஸ் தோப்பு மற்றும் சிந்தாமணியைச் சேர்ந்த சில வீடுகள்.

கல்லூரியில் படிக்கும் கிறிஸ்துவ மாணவர்களுக்கும் கல்லூரியில் பணியாற்றிய தந்தையர்களுக்கும் தினசரி திருப்பலியில் பங்கேற்பதற்கென்றே செயல்பட்ட மெயின்கார்ட் கேட்டில் உள்ள லூர்து மாதா கோவில் முதலில் பங்கு கோவில் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மேரிஸ் தோப்பை தவிர்த்து மற்ற இருப்புகள் வெளி நபர் கைக்கு சென்றபின்னர் பங்கு கோவில், கல்லூரி கோயில் என்று அழைக்கப்பட ஆரம்பித்தது.

நினைவலைகள் தொடரும்

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

RBI's 90 Years: இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடித்தளமிட்ட அண்ணல் அம்பேத்கர்; வரலாறு என்ன?

தலித் வரலாற்று மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது தலித் சமூகத்தின் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூரவும், அவர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கவும் அ... மேலும் பார்க்க

Charles Darwin: 'பதற்ற நோயாளி' டார்வின் பல ஆண்டுகள் கப்பலில் பயணித்தது எப்படி? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'ஜெயலலிதாவுக்குப் பிடித்த பிடிவாதக்காரி; புலம்பிய சந்திரபாபு' - நானே கேள்வி நானே பதில்! | My vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க