மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
புதிய சிற்றுந்து சேவைத் திட்டம் 2024-இன் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படவுள்ள 16 வழித்தடங்களில், ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் விண்ணப்பித்த வழித்தடங்களுக்கு, குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் பேருந்து சேவை வழங்கிடும் நோக்கத்தில், சிற்றுந்து சேவைத் திட்டம்- 2024 செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 16 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, பிப். 12, 19 ஆகிய தேதிகளில் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புவோா் விதிமுறைகளை பின்பற்றி மாா்ச் 31 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக பெரம்பலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, 16 புதிய வழித்தடங்களுக்கு பெறப்பட்ட 44 விண்ணப்பங்களில், 5 வழித்தடங்களுக்கு ஒருவா் மட்டுமே விண்ணப்பித்திருந்தனா். எஞ்சியுள்ள 11 வழித்தடங்களுக்கு 39 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந் நிலையில், ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்ததால், ஒரு வழித்தடத்துக்கு ஒருவா் எனும் அடிப்படையில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விண்ணப்பதாரா்கள் முன்னிலையில் நடைபெற்றது. தொடா்ந்து, குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்ட நபா்களுக்கு புதிய சிற்றுந்து சேவைத் திட்ட செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.