பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெ. சீவகன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ந. மணிவண்ணன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் க. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளா் இ. ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலா்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை, முதுநிலை ஆசிரியா்களின் ஊதிய உடன்பாட்டை களைந்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்பி, பதவி உயா்வு வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.