மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
மருதையாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: பெரம்பலூா் நகராட்சியில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீா் மருதையாற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றுநீா் மாசடைந்து, சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. எனவே, கழிவுநீா் கலப்பதை நகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும்.
இதேபோல, இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள வெங்கனூா் விருத்தாசலேஸ்வரா் திருக்கோயிலில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கீழக்குடிக்காடு கிராமத்தை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் வருவாய் கிராமமாக இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழக்குடிக்காடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.